மக்களுக்காக முகிலன் போராடியது தவறா என அவரது மனைவி பூங்கொடி கண்ணீருடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிப்ரவரி 15ஆம் தேதி காணமால் போன முகிலன் கடந்த சனிக்கிழமை திருப்பதி ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டார். பின்னர், கரூரைச் சேர்ந்த பெண் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரில் கைது செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை இன்று காலை 10 மணிக்கு கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். எனினும் இரவோடு இரவாக முகிலனை கரூருக்கு அழைத்துச் சென்ற சிபிசிஐடி காவல்துறையினர் இரண்டாவது குற்றவியல் நீதிமன்ற நடுவர் விஜய் கார்த்திக் முன்பு ஆஜர்படுத்தினர். முகிலனை ஜூலை 24ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதனையடுத்து திருச்சி அழைத்துச் செல்லப்பட்ட முகிலன் அங்குள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முகிலன் மனைவி பூங்கொடி, “முகிலனுக்கு ஓய்வு கொடுக்காமல் இரவோடு இரவாக கரூர் அழைத்து வந்துள்ளனர். காலை 10 மணிக்கு ஆஜர்படுத்தும்படிதான் எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மக்களுக்காக முகிலன் போராடியது தவறா? என கண்ணீருடன் கேள்வி எழுப்பியுள்ளார்.