சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போனது முதல், சிபிசிஐடி காவல்துறையினர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது வரை நடந்த நிகழ்வுகளை சுருக்கமாக பார்க்கலாம்.
கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து முகிலன் காணாமல் போனார். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 18 ஆம் தேதி முகிலனை கண்டுபிடிக்கக்கோரி ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பிப்ரவரி 22ஆம் தேதி, முகிலன் குறித்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 25ல் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
முகிலனை காணவில்லை எனப் பல இடங்களில் காவல்துறையினர் போஸ்டர்களை ஒட்டி தீவிரமாக தேடிவந்தனர். மார்ச் 18ஆம் தேதி, 9 பக்க விசாரணை அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்தது. அதன் பின்னர், ஜூன் 6ஆம் தேதி முகிலன் குறித்து துப்பு கிடைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறை தகவல் தெரிவித்தது. ஜூன் 27ல், இந்த வழக்கில் 3வது விசாரணை அறிக்கையை சிபிசிஐடி தாக்கல் செய்தது. விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முகிலன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.