முடிச்சூரில் தேங்கிய மழைநீரால் பொது மக்கள் கடும் அவதியடைந்து வரும் நிலையில், மழைநீர் நிரம்பிய சாலையில் நடந்து செல்லும் பெண் ஒருவர் பள்ளத்தில் விழும் அதிர்ச்சி காட்சி வெளியாகியுள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் மிதமானது முதல் கன மழை பெய்து வந்தது. அதன் காரணமாக தாம்பரம் அடுத்த முடிச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமி நகர் முதல் தெரு உள்ளிட்ட சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.
குறிப்பாக மழை நீர் வடிக்கால்வாய் அமைப்பதற்காக நகர் முழுவதும் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் இந்த பள்ளங்கள் மற்றும் சாலைகள் முழுவதும் மழைநீர் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் நடந்து செல்வர்கள் ஆபத்தான முறையில் அச்சத்துடன் சாலையைக் கடந்து செல்கின்றனர்.
இந்நிலையில், முடிச்சூரில் தனது வீட்டில் இருந்து வெளியே வரும் பெண் ஒருவர் மழைநீர் நிரம்பிய சாலையில் நடந்து செல்ல முற்படும்போது, அந்த இடத்தில் இருந்த பள்ளத்தில் தவறி சேறு நிறைந்த தண்ணீரில் தவறி விழுந்துள்ளார். இந்த பதைபதைக்கும் காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்வலைகளை கிளப்பியுள்ளன.
நல்வாய்ப்பாக தவறி விழுந்த அந்த பெண்ணுக்கு எந்த வித படுகாயங்களும் ஏற்படவில்லை. சம்பந்தப்பட்ட முடிச்சூர் ஊராட்சி நிர்வாகம் மழைநீர் வடிவதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீர் தேங்கி மக்கள் உயிருக்கே ஆபத்தாக மாறக்கூடும் என்பதை உணர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.