சென்னை அடுத்த வண்டலூர் பூங்காவுக்கு நேற்று மற்றும் நேற்று முன் தினம் ஆகிய வார இறுதி விடுமுறை நாட்களில் சுமார் 28,000 சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்ததாக பூங்காவின் நிர்வாக துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், “சனிக்கிழமையன்று 12,500 பேரும், நேற்று 15,600 பேரும் பூங்காவிற்கு வந்து பார்வையிட்டுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக குறைந்த அளவே சுற்றுலாப் பயணிகள் வருகை இருந்த நிலையில், கடந்த இரு நாட்களில் குடும்பத்துடன் மக்கள் திரண்டு பார்வையிட்டுள்ளனர்” என தெரிவித்தார்.
இதேபோல சென்னை மெரினா கடற்கரையிலும் விடுமுறை நாள் என்பதால் பொது மக்கள் குவிந்தவண்ணம் இருந்தது. மெரினா கடற்கரையில் பொது மக்கள் சமுக இடைவெளி, முக கவசம் என எந்த ஒரு கொரோனா தடுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றாமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. கடற்கரையில் பொது மக்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால், சென்னையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க இதுவே வழிவகை செய்துவிடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது.
தொடர்புடைய செய்தி: தமிழ்நாட்டில் மீண்டும் உயர்கிறதா கொரோனா தொற்று?