கரூர் மாவட்டத்தில் சாலைகள் வேலை செய்யாமலேயே சுமார் 3 கோடி பணம் எடுக்கப்பட்டுள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் குற்றம்சாட்டி பேட்டியளித்தார்.
அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் ஈசநத்தம், கூம்பூர், வீரியப்பட்டி ஆகிய சாலைகளை கட்சி நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து அவர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் மனுவை அளித்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், ''கரூர் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் 170 கோடியில் நெடுஞ்சாலைத் துறையில் பணிகளுக்கு ஒப்பந்தம் நடைபெற்றுள்ளது. ஈசநத்தம், கூம்பூர், வீரியப்பட்டி ஆகிய சாலைகளை, வேலை செய்யாமல் பணம் எடுத்துள்ளனர். நன்றாக உள்ள இந்த சாலைகள், புதிதாக அமைக்கப்பட உள்ளதாகக் கூறி சுமார் 3 கோடி அரசு பணம் எடுக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் தில்லு முள்ளு நடக்கிறது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது, கரூர் மாவட்டதில் நெடுஞ்சாலை துறை, கிரசர், சவுடு மண் என திமுகவினர் கூறு போட்டு விற்றுவருகின்றனர். 140 கோடி வேலையை காண்ட்ராக்டர் ஒருவர் மட்டுமே ஒப்பந்த செய்துள்ளார்’’ எனத் தெரிவித்தார்.