“பிரசாந்த் கிஷோர் இணையாமலிருப்பதே காங்கிரஸ்க்கும் அவருக்கும் நல்லது”- திருநாவுக்கரசர்

“பிரசாந்த் கிஷோர் இணையாமலிருப்பதே காங்கிரஸ்க்கும் அவருக்கும் நல்லது”- திருநாவுக்கரசர்
“பிரசாந்த் கிஷோர் இணையாமலிருப்பதே காங்கிரஸ்க்கும் அவருக்கும் நல்லது”- திருநாவுக்கரசர்
Published on

`பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை கேட்டுக்கொண்டு ஆட்சி நடத்த முடியாது. அவர் பேசியதை அவரே ரசிக்க வேண்டியது தான்' என எம்.பி. திருநாவுக்கரசர் பேட்டியளித்துள்ளார்.

பாதுகாப்பு துறைக்கு சொந்தமான நிலம் ஒதுக்குவது தொடர்பான பிரச்னையில் திருச்சியில் கடந்த 8 ஆண்டுகளாக ரயில்வே சந்திப்பு மேம்பால பணி முழுமையடையாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பாதுகாப்பு துறைக்கு சொந்தமான 66 செண்ட் இடத்தை ஒன்றிய அரசு அந்த பாலப்பணிக்காக ஒதுக்கியது. இந்நிலையில் தற்போது அந்த பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதனை மக்களவை திருச்சி தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடந்த 8 ஆண்டுகளாக மேம்பால பணி நிறைவடையாமல் இருந்தது. நான் மக்களவை தேர்தலில் போட்டியிடும் போது இந்த மேம்பால பணியை நிறைவு செய்ய நடவடிக்கை எடுப்பேன் என கூறி இருந்தேன். அதற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அதிகாரிகளை தொடர்ந்து சந்தித்து பேசினேன். தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரும் முயற்சி செய்தனர். ஏற்கெனவே இருந்த திருச்சி எம்.பி, முன்னாள் அமைச்சர்களும் முயற்சி செய்தனர். தற்போது அந்த பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் நான்கு முதல் ஐந்து மாதங்களுக்குள் பணிகள் நிறைவடையும்.

பாஜகவின் ஆதிக்கம், 30 ஆண்டுகளுக்கு இருக்கும் என்று சொல்லும் பிரசாந்த் கிஷோர் ஒன்றும் மந்திரவாதி இல்லை. அவர் காங்கிரசில் இணையாமல் இருப்பதே அவருக்கும் நல்லது, கட்சிக்கும் நல்லது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிப் பெறும். எந்த ஒரு அரசும், சாம்ராஜ்யமும் நிலையாக தொடர்ந்து இருந்தது இல்லை. ராஜபக்ச சகோதரர்களை இலங்கை மக்கள் கொண்டாடினார்கள். இன்று அந்த மக்களுக்கு பயந்தே மஹிந்த ராஜபக்ச ஓடுகிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்.

பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை கேட்டுக்கொண்டு ஆட்சி நடத்த முடியாது. மக்களுக்கு என்ன தேவை என்பதை அரசாங்கம் முடிவெடுக்கும் அதை மக்கள் ஏற்பார்களே தவிர அண்ணாமலை எடுக்கும் முடிவை மக்கள் ஏற்க மாட்டார்கள். அண்ணாமலை பேசுவதை அவரே ரசித்து கொள்ள வேண்டியது தான்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com