முதல் சுற்றில் அதிக காளைகள் பிடித்த வீரர்கள் 2 ஆம் சுற்றில் களமாடி வருகின்றனர். பச்சை நிற ஆடை அணிந்து, பாய்ந்து வரும் காளைகளை அசராமல் ஓடி அடக்குகிறார்கள் காளையர்கள்.
மதுரை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஜல்லிக்கட்டு போட்டியை காண மதுரையில் மக்கள் குவிந்து வருகின்றனர். 3 நாட்கள் நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் நாளான இன்று (15.1.2024) மதுரை அவனியாபுரத்தில் நடைப்பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து 16 ஆம் தேதி பாலமேட்டிலும் , 17 ஆம் தேதி அலங்கா நல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில், இரண்டாம் சுற்றில் பங்கேற்ற விசிக தலைவர் திருமாவளவனின் காளை காளையர்களின் பிடிக்கு சிக்காமல் களத்தை விட்டு வெளியேற வெற்றியை தனதாக்கி கொண்டுள்ளது. வெற்றி பெற்ற காளைக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கிய தங்கக்காசு பரிசளிக்கப்படுவதாக ஜல்லிக்கட்டு களத்தில் அறிவிக்கப்பட்டது.
மேலும் முன்னதாக போட்டியின் இறுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு காரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு காரும் பரிசாக வழங்கப்படுகிறது. அதேபோல் சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி சார்பில் 2 பசுமாடுகள் பரிசளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
மற்ற வீரர்களுக்கு இடையூறு செய்வதாக இரண்டு சுற்றிலும் சிறப்பாக விளையாடிய வீரர் திருப்பதிக்கு விழா குழு கண்டனம் செய்துள்ளது. அதன்படி விதிகளை மீறி காளைகளை பிடிப்பதாக கூறி எச்சரித்து ரெட் கார்டு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.