சென்னையை அடுத்த ஆவடியில் செயல்படும் மத்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான என்ஜின் தொழிற்சாலையில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா, திருமாவளவன் மணி விழா மற்றும் அம்பேத்கர் தொழிலாளர் சங்க ஆண்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அவர். அப்போது மகளிர் உரிமைத் தொகை குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “எந்தவொரு திட்டமாக இருந்தாலும் வரையரை உருவாக்குவார்கள் என கூறியவர் அண்ணாமலை. ஆனால் இப்போது, அரசுக்கு எதிராக ஏதாவது கூறவேண்டும் என பேசி வருகிறார். தொடர்ந்து அரசுக்கு எதிரான விமர்சனங்களை வைத்து வருகிறார் அண்ணாமலை. இந்திய அளவில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நடைமுறைபடுத்த பரிசீலனை செய்கின்றனர். பலரால் வரவேற்கக் கூடிய சிறப்பு திட்டமாக இது உள்ளது. இதனை பாஜகவினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
இந்த ஆளுநர் (ஆர்.என்.ரவி) எங்கெல்லாம் செல்கின்றாரோ அங்கெல்லாம் பிரச்னைகளை உருவாக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். பாஜக ஆளாத மாநிலத்தில் அரசியல் ஸ்திரத்தன்மைளை சீர்குலைப்பதே அவர்களது நோக்கமாக உள்ளது. தமிழ்நாட்டில் அவர்களது முயற்சி பலிக்காது. முதல்வர் அவர்களை கடுமையாக எதிர்த்து வருகிறார். ஜனநாயக சக்திகள் அனைவரும் அவருக்கு உற்ற துணையாக இருப்போம்” என்றார்.
தொடர்ந்து ‘விரைவில் 90 எம்.எல் மது விற்பனை’ குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தான் விசிக-வின் நிலைப்பாடு. இதில், கருத்து சொல்ல எதுவும் இல்லை” என தெரிவித்தார்.