அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் கணவரான ராமசாமி டெல்லி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், அவரது மனைவி என புகாரளித்த சத்யபிரியாவை டெல்லி காவல்துறை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சத்யபிரியா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்க்ல செய்திருந்தார். அதில், “ ராமசாமி என்பவர் என்னை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்து விட்டார். தற்போது சசிகலா புஷ்பா எம்.பி,யை திருமணம் செய்துள்ளார். இது சட்டத்திற்கு உட்பட்டதா..? என தெரியவில்லை. ராமசாமி, தனது முதல் மனைவியின் மகளை நான் கொடுமைப்படுத்தியதாக டெல்லி வடக்கு அவென்யூ காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் என்மீதும், எனது தம்பி மணிகண்டன் ஆகியோர் மீதும் போஸ்கோ சட்டத்தின்படி டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்காக ஏப்ரல் 24-ஆம் தேதி 3 மணிக்கு டெல்லி வடக்கு அவென்யூ காவல் நிலையத்தில் 2 பேரும் நேரில் ஆஜராக வேண்டிய நோட்டீசை மதுரை கீரைத்துறையில் உள்ள என் வீட்டில் டெல்லி போலீசார் ஒட்டியுள்ளனர். தவறான தகவலால் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட வழக்கில் எனக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கூறி இருந்தார்
இந்த மனு இன்று நீதிபதி சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சத்யபிரியாவை ஜூன் 6-ஆம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடைவிதித்து வழக்கு விசாரணையை ஜூன் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.