குடியரசுத் தலைவர் விருது பெற்ற ஒடிசா மாநில காவல்துறை அதிகாரியான சிவசுப்ரமணிக்கு விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள எம்.பி ரவிக்குமார், “ விழுப்புரம் மாவட்டம் நேமூர் கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த கா.சிவசுப்ரமணி பள்ளிப்படிப்பில் சிறந்து விளங்கினாலும் உயர் கல்வி பெற முடியாத பொருளாதார நிலை காரணமாக எஸ்எஸ்எல்சி முடித்து ஐடிஐயில் சேர்ந்தார். அதை நிறைவுசெய்து மெக்கானிக்காக பல துறைகளில் வேலை செய்தார்.
எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கான பேருந்துகளை நிர்வகிக்கும் மேலாளராகப் பணியில் சேர்ந்தபோதுதான் அவருக்கு ஐபிஎஸ் ஆகும் எண்ணம் உதித்தது. அதன்பின் ப்ளஸ் டூ படிப்பையும் பிஏ படிப்பையும் தொலைநிலைக் கல்வி மூலம் முடித்தார். எஸ்எஸ்என் கல்லூரி நூலகத்தைப் பயன்படுத்தி யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயார் செய்தார். ஆறுமுறை தொடர்ந்து தேர்வெழுதி ஆறாவது முறை ஐபிஎஸ் ஆனார். உழைப்பும் உறுதியும் ஒருவரை எந்த நிலைக்கு உயர்த்தும் என்பதற்கு திரு கே.சிவசுப்ரமணி ஒரு உதாரணமாகத் திகழ்கிறார்.
இந்த ஆண்டு வீரதீர செயல்களுக்கான குடியரசுத் தலைவரின் பதக்கத்தை அவர் பெற்றிருக்கிறார். கல்வியில் பின் தங்கிய விழுப்புரம் மாவட்டத்திலிருந்து ஒரு சாதனையாளராக உயர்ந்திருக்கும் அவர் விழுப்புரம் மாவட்ட மாணவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார். அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தினேன். உயரட்டும் தமிழ்க்கொடி. நிமிரட்டும் தமிழ்க்குடி” என பதிவிட்டுள்ளார்.