தருமபுரி மற்றம் சுற்று வட்டார பகுதியில் நிலவும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
தருமபுரி மாவட்டம் முழுவதும் கடந்த சில மாதங்களில் பரவலாக நல்ல மழை பெய்தது. இதனால் நல்லம்பள்ளி, அதியமான் கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பின. ஒரு சில ஏரிகள் மற்றும் அணைகள் முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து உபரி நீரும் வெளியேற்றப்பட்டது. இதையடுத்து கடந்த சில வருடங்களில் இல்லாத அளவிற்கு அதிக அளவு பனிப்பொழிவும் மூடு பனியும், நிலவி வந்தது.
ஆனால் பனிக்காலம் முடிந்து, மாசி மாதம் தொடங்கி உள்ள நிலையில், இன்று தருமபுரி நல்லம்பள்ளி, பாளையம் புதூர், வெள்ளக்கல், தொப்பூர், அதியமான் கோட்டை உள்ளிட்ட பகுதியில் அதிகாலை முதல் கடுமையான மூடுபனி காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிப்பட்டனர். சேலம் பெங்களூர் பிரதான தேசிய நெடுஞ்சாலை முழுமையாக மூடிய மூடுபனியால் வாகன ஓட்டிகளும் தங்கள் வாகனத்தை குறைந்த வேகத்திலேயே இயக்கினர்.
முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு மூடுபனி நிலவியதால் தங்கள் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே மிதமான வேகத்தில் வாகனத்தை இயக்கினர்.