விருதுநகர் மாவட்டம் செங்கமநாச்சியார்புரத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சிறுமிகள் 2 பேர் உயிரிழந்தனர்.
சிவகாசி அருகேயுள்ள பழைய வெள்ளையாபுரத்தை சேர்ந்த சிவக்குமார் தனது குடும்பத்தினருடன் இரு சக்கர வாகனத்தில் சிவகாசிக்கு சென்றுவிட்டு நள்ளிரவு வீடு திரும்பியிருக்கிறார். எதிரே வந்த அருண்ராஜ் என்பவர் செங்கமநாச்சியார்புரத்தில் சிவக்குமார் வந்த வாகனத்தின் மீது மோதியுள்ளார். இதில் சிவகுமாரின் 4 வயது மகள் வேத நிதிஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு மகள் சுபிக்சா சிகிச்சை பலன் இன்றி இன்று காலை உயிரிழந்தார்.
காயமடைந்த சிவகுமார் மற்றும் அவரது மனைவி காளீஸ்வரி, விபத்து ஏற்படுத்திய அருண்ராஜ் ஆகியோர் மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அருண்ராஜ் மது அருந்திவிட்டு போதையில் வாகனம் ஓட்டி வந்ததே விபத்து ஏற்படக் காரணம் என திருத்தங்கல் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.