செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
சென்னை மதுரவாயல் அருகே ஆலப்பாக்கம் தனலட்சுமி நகர், 6-வது தெருவை சேர்ந்தவர்கள் சிவபிரகாஷ் -அஞ்சலி (25), தம்பதியர். இவர்களுக்கு 3 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் இருந்தபோது வாடகைக்கு வீடு கேட்பதுபோல் வந்தவர்கள் குழந்தையை கடத்திச் சென்று விட்டதாக போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு அஞ்சலி தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தபோது தனது குழந்தையை பூந்தமல்லியில் உள்ள உறவினர் வீட்டிற்கு கொடுத்துவிட்டதாக அஞ்சலி கூறியதை அடுத்து, அங்கு சென்று பார்த்தபோது அவர் கூறியது பொய் என்பது தெரியவந்தது.
பின்னர் குழந்தையை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டதாக முன்னுக்குப் பின் அஞ்சலி முரணாக பதில் கூறியுள்ளார். இதனால் குழப்பமடைந்த மதுரவாயல் போலீசார், சம்பந்தப்பட்ட இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், அஞ்சலி ஒரு பையில் குழந்தையை கொண்டு செல்வதும், குப்பைத் தொட்டியில் அதனை போட்டுச் செல்வதும் பதிவாகி இருந்தது. இதனையடுத்து மதுரவாயல் போலீசார் ,ஜேசிபி, மோப்பநாய் உதவியுடன் கடந்த செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று தினங்களாக பெருங்குடி குப்பைக் கிடங்கில் தீவிரமாக குழந்தையை தேடி வந்தனர். இந்த நிலையில் குழந்தை கிடைக்காததால் தாய் அஞ்சலியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், உடல்நலக் குறைவால் குழந்தை உயிரிழந்ததை அடுத்து குழந்தையை குப்பைத் தொட்டியில் போட்டதும், கணவருக்கு அஞ்சி தொலைந்து போனதாக நாடகமாடியதும் தெரியவந்தது. இதனையடுத்து தாய் அஞ்சலியை பூந்தமல்லி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்திய நிலையில், அங்கு அவருக்கு நீதிபதி, ஜாமீன் வழங்கினார்.