வறுமையின் காரணமாக மூளை வளர்ச்சியற்ற மகனை கருணைக்கொலை செய்ய வேண்டும் என்று பெற்றோரே கோரிக்கை விடுத்துள்ளனர். 16 ஆண்டுகளாக படும் வேதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
துள்ளிக்குதிக்க வேண்டிய வயதில், தாய், தந்தை தோளில் சுமந்து செல்லக்கூடிய நிலையில் இருக்கிறான் தேனி பெரியகுளம் அருகில் உள்ள தென்கரையைச் சேர்ந்த சயது அபுதாகீர், நபிசா பேகம் தம்பதியின் இளைய மகன். இந்த தம்பதியின் இரண்டு மகன்களும் மூளை வளர்ச்சி குறைபாடுடன் பிறந்தவர்கள். சாதாரண லாரி ஓட்டுநரான சயது அபுதாகீர், தனது குறைந்த வருமானத்தில் மகன்களை பராமரிக்கவும், மருத்துவம் பார்க்கவும் முடியாமல் அவதிப்படுவதால், இருவரையும் கருணைக்கொலை செய்ய அனுமதிக்க கோரி மாவட்ட நிர்வாகத்திடம் கடந்த ஆண்டு மனுதாக்கல் செய்திருந்தார். உடல்நலம் குன்றி மூத்த மகன் உயிரிழக்க தற்போது இளைய மகனை கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மகனுக்கு சிகிச்சை அளிக்க கூட தங்களிடம் பணம் இல்லை என்றும், ஒவ்வொரு நாளும் மரணத்தின் பிடியில் சிக்கி தவிப்பதை பார்க்க முடியவில்லை என்றும் இந்த தம்பதிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். மகனை பராமரிக்க உதவியாக நிரந்தர வேலை வழங்கினால் கூட போதும் என்று இந்த தம்பதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.