செய்தியாளர் - அருளானந்தம்
__________
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த சண்முகநாதன் - துளசி தம்பதிக்கு 13 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்களது வீட்டிற்கு முன் செல்லக்கூடிய மின்சார வயர் தாழ்வாக செல்வதால் அருகில் உள்ள மரத்தின் மீது அது உரசி அவ்வப்போது மின் துண்டிப்பு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மின்வாரிய ஊழியர்களிடம் சண்முகநாதன் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர்களான லூக்காஸ், குமார் ஆகிய இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘மின்வாரிய அலுவலகத்தில் புகார் செய்வீர்களா’ என்று கூறி சண்முகநாதனை தாக்கியுள்ளனர்.
இதில் காயம் அடைந்த சண்முகநாதன், பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். சண்முகநாதனின் மனைவி துளசி மேற்படி லூக்காஸ் மற்றும் குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதேபோன்று லூகாஸ் மற்றும் குமார் ஆகியோர் தரப்பினரும் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இரு தரப்பினரையும் தென்கரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, தென்கரை காவல்துறையினர் துளசியிடம் ‘உங்களின் உறவினரான சிறுவன் ஒருவர் பெயரிலும் சேர்த்து வழக்கு பதிவு செய்வோம்’ என்று ஒருதலைபட்சமாக பேசி மிரட்டுவதாக கூறிய துளசி, இன்று காலை சுமார் 7 மணி அளவில் பெரியகுளம் வடகரை அம்பேத்கர் சிலை முன்பு தனது 13 வயது மகளுடன் மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்க முற்பட்டார்.
தகவல் அறிந்த பெரியகுளம் காவல் துறையினர், துளசியிடம் இருந்து மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி தாய், மகள் இருவர் மீதும் தண்ணீர் ஊற்றி மீட்டனர். தொடர்ந்து, பெரியகுளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து தென்கரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .