இரு குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர், மின்துறையில் மின்கம்பங்கள் பழுது பார்க்கும் பணிக்கான உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் பி.ஜோதி. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஜோதி ஐடிஐ தொழிற்கல்வியில் டிப்ளமோ பட்டம் பெற்றவர். படித்து முடித்துவிட்டு வீட்டில் இருப்பதைவிட தான் படித்த படிப்புக்கான வேலையை செய்வோம் என முடிவு எடுத்துள்ளார். ஆகவே மின்துறை சார்ந்த மின்கம்பம் ஏறுதல், மற்றும் மின்கம்பங்களில் ஏற்படும் பழுதுகளை நீக்குதல் போன்ற பணிகளுக்காக வேலைக்கு விண்ணப்பித்துள்ளார்.
இதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு உடற்தகுதித் தேர்வு நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்று ஆண்களால் மட்டுமே செய்ய முடியும் எனக் கருதப்படும் கடுமையான மின் கம்பம் சீரமைப்பு பணியினை செய்து காட்டி அதற்கான உடற்தகுத் தேர்வில் தேர்வாகினார். இதுவரை இந்தப் பணியில் மூன்று பெண்கள் தேர்வாகி உள்ளனர்.
இதுகுறித்து ‘தி ஹிந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அவரது கணவர் புஷ்பராஜிடம் அவர்கள் பேச முற்பட்டபோது அவர் தனது குழந்தைகளுக்கு உணவளிப்பதற்காக ஜோதி வீட்டிற்கு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். ஒருபக்கம் கடுமையான பணிக்காக உடற்தகுதித் தேர்வில் பங்கேற்றுவிட்டு அதே வேகத்தில் வீட்டில் குழந்தைகளுக்கு உணவளிப்பதற்கு சென்றிருந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இவ்வளவு ஆபத்து நிறைந்த பணியில் மனைவியை வேலைக்கு அனுப்புவது குறித்த கேள்விக்கு புஷ்பராஜ், ‘தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் என் மனைவியும் ஒருவராக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கிய உடற்தகுதி சோதனைகள் இந்த மாதம் 12-ஆம் தேதியுடன் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என தேர்வுக்கான அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மொத்தம் 1,170 பேர் உடல் தகுதி சோதனைக்கு வந்துள்ளனர். இவர்களில் 337 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுவரை வந்த வேட்பாளர்களில் 61 பேர் பெண்கள், அவர்களில் ஒருவர் மட்டுமே உடற்பயிற்சி தேர்வில் தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.