செய்தி எதிரொலி: மனநிலை பாதித்த பெண்ணின் தாய்க்கு கடனுதவி வழங்கிய காஞ்சிபுரம் ஆட்சியர்

செய்தி எதிரொலி: மனநிலை பாதித்த பெண்ணின் தாய்க்கு கடனுதவி வழங்கிய காஞ்சிபுரம் ஆட்சியர்
செய்தி எதிரொலி: மனநிலை பாதித்த பெண்ணின் தாய்க்கு கடனுதவி வழங்கிய காஞ்சிபுரம் ஆட்சியர்
Published on

மனநிலை பாதித்த பெண்ணின் தாய்க்கு, புதிய தலைமுறை செய்தியின் எதிரொலியாக கடனுதவி வழங்கியுள்ளார் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி.

காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேடு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மஞ்சுளா. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது கணவர் குடிக்கு அடிமையாகி குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுள்ளார். மஞ்சுளாவுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இரண்டு மகள்களும் மனநிலை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர்.

மஞ்சுளா, காஞ்சிபுரம் நகரப் பகுதியில் பழ வியாபாரம் செய்து அவர்களை பராமரித்து வந்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பேருந்து மோதி மஞ்சுளாவுக்கு ஏற்பட்ட விபத்தினால், அன்றிலிருந்து பழக்கூடைகளை சுமந்து செல்ல முடியாத அளவுக்கு அவருக்கு உடல் நலிவுற்றிருக்கிறது. இதனால் தன் மகள்களை பராமரிக்க முடியாமல் தவித்து வந்திருக்கிறார். மேலும் தான் வசிக்கும் வீடு முழுவதும் பழுதடைந்து இருப்பதால் மழைக் காலங்களில் தனது வீட்டில் தங்க இயலாத சூழலில் இருந்திருக்கிறார்.

இந்நிலையில் அவருடைய இரண்டாவது மகளுக்கு அவ்வப்போது திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு அவசர சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டிருந்திருக்கிறது. வீடு சரியாக இல்லாததால், சிகிச்சை முடிந்த பின் மகளை பராமரிக்க முடியாமல் திணறிவந்துள்ளார். 

மேலும் அடிக்கடி மகளுக்கு வலிப்பு ஏற்பட்டதால், அவசர காலங்களில் மகளை உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரமுடியாத சூழலில் பலமுறை கடும் அவதியுற்று உள்ளதாகவும் நம்மிடையே சொன்னார் அவர். இரண்டாவது மகளுக்காகவே, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை பகுதிகளிலேயே வசதியேதும் இல்லாத ஓர் இடத்தில் வசிக்க தொடங்கியிருக்கிறார். முதல் மகளை, உறவுக்காரர் ஒருவரின் வீட்டில் பராமரிக்கும்படி கூறியிருந்திருக்கிறார். இதன்மூலம் பிரச்னை சரியாகும் என நினைத்த அவருக்கு, மேலும் அதிர்ச்சியே காத்திருந்தது.

அதுபற்றி புதிய தலைமுறையிடம் பேசியபோது, “முதல் மகளை உறவினர் வீட்டில் விட்டிருந்தாலும்கூட, அங்கு அவர் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. மூத்த மகள், உறவினர் வீட்டில் வராண்டாவிலும் - இளைய மகள் மருத்துவமனை படுக்கையிலும் - நானோ மண் வீட்டில் எலிகளுக்கிடையில், மழை நீர் ஒழுகும் அளவுக்கு தரமற்ற ஒரு ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டை போட்ட ஒற்றை அறையிலும் கேட்பாரற்று வாழ்கிறோம்” எனக்கூறி, உதவிக்கரங்களுக்காக காத்திருந்தார்.

இச்செய்தியை அறிந்த காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் லோகநாதன் பாதிக்கப்பட்ட தாய்க்கு மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் சிறு வணிக கடனாக அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்க முன்வந்தனர். அவர்களைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி இன்று மஞ்சுளாவுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். மேலும் மஞ்சுளாவிற்கு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் வீடு வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். ஆட்சியரின் இந்த நடவடிக்கையால், சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார் மஞ்சுளா.

- பிரசன்னா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com