மழை நீர் கால்வாயில் தவறி விழுந்ததில் தாய் மகள் பலியான சம்பவம் மற்றும் கழிவுநீர் தொட்டியில் விழுந்து வேளாண் துறையின் மாற்று திறனாளி பெண் ஊழியர் பலியான சம்பவம் ஆகியவற்றை மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்காக எடுத்துள்ளது.
சென்னை அம்பத்தூரை அடுத்த அயனம்பாக்கத்தில் வசித்து வந்த தனியார் மருத்துவக் கல்லூரி பேராசிரியை கரோலின் பிரசில்லா. இவர் நேற்று மாலை தனது மகள் இவாலினுடன் இரு சக்கர வாகனத்தில் கடைவீதிக்குச் சென்றார். தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் உள்ள சர்வீஸ் சாலையில் அவர் சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி மழைநீர் கால்வாயில் விழுந்ததில், கரோலின் பிரசில்லாவும், இவாலினும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இந்த சம்பவம் தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மூன்று வாரங்களில் சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்.
இதேபோல, காஞ்சிபுரம் களக்காட்டூர் வேளாண் துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்த மாற்றுத் திறனாளி சரண்யா, அருகில் உள்ள குடியிருப்பில் இருந்த கழிப்பறையை பயன்படுத்தியுள்ளார். அப்போது, தொட்டிக்குள் தவறி விழுந்ததில் பலியானார். வேளாண் துறை அலுவலகத்தில் கழிப்பறை வசதி இல்லாததே சரண்யாவின் மரணத்திற்கு காரணம் என பணியாளர்கள் புகார் தெரிவித்ததாக செய்தி வெளியானது.
இந்த செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், இதுசம்பந்தமாக மூன்று வாரங்களில் விளக்கம் அளிக்க வேளாண் துறை இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளார்.