மாற்றுத்திறனாளியான தன் மகளை பத்து மாதம் கருவிலும் 15 ஆண்டுகள் தோளிலும் தாய் ஒரு சுமந்து வருகிறார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்துள்ள பெருங்கோழி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் பத்மாவதி. இவருக்கு சரவணன் என்பவருடன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. அவர்களது மகள் திவ்யா. பிறக்கும் போதே கால்கள் இரண்டும் சூம்பிய நிலையில் காணப்பட்டது.
இந்த நிலையில் சரவணன் பத்மாவதியை பிரிந்து வேறு ஒரு பெண்ணுடன் சென்றுவிட்டார். பத்மாவதி கூலி வேலைக்கு சென்று தனது மகளை வளர்த்து வந்தார். தொடக்க கல்வியை தனது சொந்த ஊரில் கற்ற மாற்றுத்திறனாளியான திவ்யா தற்போது உத்திரமேரூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
கல்வியிலும் அறிவு கூர்மையிலும் சிறந்து விளங்குகிறார். தினமும் திவ்யாவை அவரது தாயார் பத்மாவதி 2 கிலோமீட்டர் தூரம் இடுப்பில் சுமந்துவந்து அரசு பஸ்சில் ஏற்றி உத்திரமேரூர் அழைத்து வருகிறார். உத்திரமேரூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் சுமந்து சென்று பள்ளியில் விட்டுவிட்டு அங்கேயே இருக்கிறார். மகளுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுத்து விட்டு மீண்டும் மாலை பள்ளிமுடிந்ததும் மகளை தூக்கிக்கொண்டு அதேபோன்று நடைபயணமாக வீட்டுக்கு செல்கிறார்.
இதுகுறித்து திவ்யாவின் தாயார் பத்மாவதி, “தினந்தோறும் என் மகளை இடுப்பில் சுமந்து கொண்டு பள்ளிக்கு வந்த பிறகு பள்ளி வளாகத்திலேயே காத்திருப்பேன். அங்கு எனது மகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறேன். அதன்பிற்கு மீண்டும் அவளை இடுப்பில் சுமந்து வீட்டிற்கு அழைத்து வருகிறேன். இதனால் என்னால் கூலி வேலைக்கு செல்ல முடியவில்லை. ஆகவே எனது மகளின் கல்விக்கு யாரேனும் உதவ முன்வர வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து மாணவி திவ்யா, “எனது மேல் படிப்பிற்கு முதலமைச்சர் உதவ முன்வரவேண்டும். நான் படித்து வேலைக்கு சென்றபிறகு என்னைப் போன்ற மாற்றுத் திறனாளியான குழந்தைகளுக்கு உதவி செய்ய விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.