திருச்சி | கணவனை காண மகளுடன் சார்ஜாவுக்கு புறப்பட்ட மனைவி! மறக்கமுடியாததாக மாறிய விமான பயணம்!

திருச்சியிலிருந்து சார்ஜாவுக்கு புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறால் வானத்தில் வட்டமிட்ட போது தரையில் இருந்த பல உறவுகளும் தத்தளித்து போயினர்.

திருச்சியிலிருந்து சார்ஜாவுக்கு புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 144 பயணிகள் இருந்தனர். அவர்களில் கணவனை காண்பதற்காக புதுக்கோட்டை மாவட்டம் களம்பலூர் தெற்குபட்டியை சேர்ந்த மாலா சேகரும் அவருடைய 6 வயது மகள் சஞ்சீனாவும் இருந்தனர். இவர்கள் இருவரையும் விமானத்தில் ஏற்றிவிட்டு சந்தோஷமாக புதுக்கோட்டை திரும்பியிருக்கிறார் மாலாவின் அண்ணன் தர்மன்.

தங்கை சென்ற விமானம் சொந்த வீட்டின் மேலேயே வட்டமடித்தது..

அங்கு சென்றபின்தான் அவருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. அவரது தங்கையும் மருமகளும் சென்ற விமானம் அவரது வீட்டுக்கு மேலேயே வட்டமடித்துக்கொண்டிருந்தது. விமானம் கிளம்பியவுடன் அதன் சக்கரத்தில் கோளாறு ஏற்பட்டதே அதற்கு பின் செய்திகளை பார்த்துத்தான் தெரிந்துகொண்டார் தர்மன்.

விமானத்தில் ஏற்பட்ட கோளாறு
விமானத்தில் ஏற்பட்ட கோளாறுகோப்பு படம்

பதறி அடித்துக்கொண்டு மீண்டும் தனது காரில் திருச்சிக்கு விரைந்தார். அங்கு விமானத்தை மீண்டும் தரையிறக்குவதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இறுதியில் சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்த திக் திக் தருணங்களுக்கு பிறகு விமானம் இரவு 8.15 மணியளவில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. சென்ற உயிர் திரும்பியதைப் போல் உணர்ந்த தர்மன் உடனடியாக தங்கையை தொடர்புகொண்டு மீண்டும் வீட்டுக்கு சென்றுவிட அழைப்பு விடுத்தார். ஆனால் தங்கையின் மகளோ சார்ஜாவில் இருக்கும் தந்தையை பார்க்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

ஷார்ஜா சென்ற தாய்-மகள்!

மாற்று விமானத்தில் பயணித்து மாலாவும் அவரது மகளும் பாதுகாப்பாக சார்ஜா சென்றடைந்தனர்.

எவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து தப்பியிருக்கிறோம் என்பதை முழுவதும் உணராமலேயே சார்ஜா வரை சென்று சேர்ந்துள்ளார் மாலா. இறுதியில் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத பயணமாக அமைந்துவிட்டது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com