அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டித் திட்டம் என்ற தகவல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி முறையாக அறிவிக்கப்பட்டு, அமல்படுத்தப்பட்டால் கிராமப்புற பள்ளிக் குழந்தைகளுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும் என்ற கருத்து நிலவுகிறது.
பள்ளிக் குழந்தைகள் பசியுடன் வகுப்பறையில் இருந்தால், பாடத்தில் கவனம் செலுத்த முடியாது என்பதால் காமராஜர் ஆட்சிக் காலத்தில் இருந்தே தமிழகத்தில் மதிய உணவு என்ற உயரிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. அடுத்தடுத்த ஆட்சிகளில் இந்தத் திட்டம் மேம்படுத்தப்பட்டுக் கொண்டே வருகிறது. தற்போது அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கலவை சாதம், பயறு, கிழங்கு ஆகியவற்றோடு முட்டையும் சத்துணவாகப் பரிமாறப்படுகிறது.
இதுகுறித்து சத்துணவு அமைப்பாளர் மல்லிகா கூறுகையில், “ஒவ்வொரு நாளும் மதியம் விதவிதமான உணவு பரிமாறுகிறோம். கலவை சாதத்துடன் முட்டையும் வழங்கப்படுகிறது. காலையில் சாப்பிடாமல் வரும் சிலர் மயக்கமுறுவார்கள். ஏழை மாணவர்களுக்கு சொந்தச்செலவில் ஆசிரியர்கள் சிற்றுண்டி தருகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து சமையலர் தங்கப்பொண்ணு கூறுகையில், “வறுமையில் உள்ள பிள்ளைகள் காலை உணவு உண்பதில்லை. காலை சிற்றுண்டி வழங்கினால் பல பிள்ளைகள் பலனடைவார்கள்” எனத் தெரிவித்தார்.
தமிழக அரசின் பட்ஜெட்டில் காலை சிற்றுண்டித் திட்டம் அறிவிக்கப்பட்டால் பொருளாதாரத்தில் நலிவுற்றோரின் பிள்ளைகள் பலன் பெறுவார்கள். அவர்களுக்கு வரப்பிரசாதமாகவும் அமையும் என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவிக்கின்றனர்.