தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும், ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. காலை 7 மணி முதலே பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து தங்களது வாக்கை பதிவு செய்தனர். பொதுமக்கள் மட்டுமல்லாமல், அரசியல் கட்சியினர், திரைத்துறை பிரபலங்கள் உள்ளிட்டோரும், வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தனர்.
கோவை மக்களவத் தொகுதியின் வேட்பாளரும், தமிழ்நாடு பாஜக தலைவருமான அண்ணாமலை கரூர் மாவட்டம் ஊத்துப்பட்டி உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கோவை தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை என குற்றம்சாட்டியுள்ளார். அவர் பேசுகையில், “முன் தயாரிப்பு மிக மோசமாக உள்ளது. அரசியல் தலையீடு இருக்கிறதா என்கிற சந்தேகமும் எங்களுக்கு வருகிறது. காரணம் பாரம்பரியமாக பாஜகவிற்கு வாக்களிப்பவர்களது வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. எங்களது கணக்கின்படி ஒரு லட்சம் வாக்காளர்கள் என்பது மிகப்பெரிய அளவிலானது” என தெரிவித்தார்.