ஆறாயிரம் நிதி திட்டத்தால் தமிழகத்தில் 73 லட்சம் விவசாயிகள் பலன்
விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் மத்திய அரசின் புதிய திட்டத்தின் கீழ், தமிழகத்தில் சுமார் 70 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
2 ஹெக்டேர் வரை நிலம் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணையாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. மத்திய அரசின் நிதியுதவித் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 12 கோடியே 56 லட்சத்து 35 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவர் எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, நாட்டிலுள்ள மொத்த விவசாயிகளில் 86 சதவிகிதத்தினர் இந்தத் திட்டத்தால் பயனடைவர்.
இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு, ஆண்டுக்கு 75 ஆயிரத்து 381 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டியிருக்கும். இந்தத் திட்டத்தால் கேரளா மற்றும் பீகார் மாநில விவசாயிகள் அதிகம் பயன்பெறுவர் எனத் தெரிகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை இந்தத் திட்டத்தின் மூலம் 73 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
2015-16ஆம் ஆண்டு விவசாய நிலங்கள் கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 62 லட்சத்து 24 ஆயிரம் விவசாயிகள் ஒரு ஹெக்டேருக்குள் நிலம் வைத்திருக்கிறார்கள். மேலும், 11 லட்சத்து 19 ஆயிரம் விவசாயிகள், ஒன்று முதல் 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, மொத்தம் 73 லட்சத்து 43 ஆயிரம் தமிழக விவசாயிகள் பட்ஜெட் சலுகையால் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி பெறவுள்ளனர்.