கலைக்கல்லூரிகளாக மாற அனுமதிகோரி விண்ணப்பங்கள்: பொறியியல் கல்லூரிகளின் பரிதாப நிலை

கலைக்கல்லூரிகளாக மாற அனுமதிகோரி விண்ணப்பங்கள்: பொறியியல் கல்லூரிகளின் பரிதாப நிலை
கலைக்கல்லூரிகளாக மாற அனுமதிகோரி விண்ணப்பங்கள்: பொறியியல் கல்லூரிகளின் பரிதாப நிலை
Published on

மாணவர்களின் சேர்க்கை இல்லை என்பதால் தமிழகத்தில் உள்ள 30 பொறியியல் கல்லூரிகளை கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்ற கல்லூரி நிர்வாகங்கள் முயற்சி செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 10 வருடங்களுக்கு முன்பு பொறியியல் படிப்பை மாணவர்கள் அதிகளவில் விரும்பி தேர்ந்தெடுத்தனர். இதனால் தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரிகள் ஆங்காங்கே முளைத்தன. ஆனால் படித்து வெளியேறியவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாதது, அதிகளவிலான மாணவர்கள் பொறியியல் படித்தது போன்ற பல காரணங்களால் பொறியியல் படிப்பு மீதான ஆர்வம் மாணவர்களுக்கு குறையத்தொடங்கியது. ஒவ்வொரு வருடமும் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையத் தொடங்கியது.

இதனால் 2017-18ம் ஆண்டில் மட்டும் 50 பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் மூடப்பட்டன. ஒவ்வொரு வருடமும் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை குறைந்துக் கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் தற்போது மாணவர்கள் மத்தியில் கலை, அறிவியல் படிக்க ஆர்வம் அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில் பொறியியல் கல்லூரிகளை கலை, அறிவியல் கல்லூரிகளாக மாற்ற கல்லூரி நிர்வாகங்கள் முயற்சி செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக பி.காம் மற்றும் கணினி தொடர்பான படிப்புகளுக்கு மாணவர்கள் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.

இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு பேசியுள்ள உயர்கல்வித்துறை அதிகாரி ஒருவர், 2020-21ம் ஆண்டுக்கான கலை, அறிவியல் கல்லூரி தொடங்க 50 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவற்றில் 30க்கும் அதிகமான விண்ணப்பங்கள் பொறியியல் கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து வந்துள்ளது என தெரிவித்துள்ளார். நாமக்கல், சேலம், கோவை, சென்னை ஆகிய இடங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொறியியல் கல்லூரியை கலைக்கல்லூரியாக மாற்றுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்றும், நிறைய விதிமுறைகள் உள்ளதாகவும் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தற்போது மொத்தமாக 767 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com