ஆவடி அருகே மதுகுடிப்பவர்களுக்கு எதிராக ஆரத்தி எடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை ஆவடியை அடுத்த அண்ணனூர் ரயில்வே சாலையில் அடுத்தடுத்து செயல்படும் இரண்டு டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி பெண்கள் ஆர்பாட்டம் நடத்தினர். அப்போது மது குடிப்பவர்களுக்கும், டாஸ்மாக் கடைக்கும் ஆரத்தி எடுத்து அவர்கள் நூதன போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த 20க்கு மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.
ஆரத்தி தட்டில் கற்பூரம் எரிய போராட்டம் நடந்தபோது, காவல்துறையினர் பெண்களை தடுத்து நிறுத்தினர். அப்போது பெண்களுக்கும் காவல்துறையினர்க்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.
மேலும், ரயில்வே சாலையில் டாஸ்மாக் உள்ளதால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், குடியிருப்பு மத்தியில் டாஸ்மாக் செயல்படுவதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் வேதனை தெரிவித்தனர். உடனே டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கையும் விடுத்தனர்.