தமிழக அரசு நடத்திய நீட் பயிற்சி மையங்களில் பயின்ற 2,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு என்.டி.ஏ மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக தமிழகத்தில் இருந்து சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் இந்தாண்டு நீட் தேர்வு எழுதினர். இவர்களில் 19 ஆயிரத்து 638 பேர் அரசு வழங்கும் நீட் பயிற்சி மையங்களில் பயின்ற அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆவர். அவர்களில் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தாண்டு நீட் பயிற்சி அளிப்பதற்காக அரசு சார்பில் 413 மையங்கள் அமைக்கப்பட்டன. அதில் திருச்சியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஒருவர் 453 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த அரசு உதவி பெறும் பள்ளியில் பிரேம் என்ற மாணவன் 402 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். போரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி சூர்யலக்ஷ்மி 368 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
கடந்தாண்டில் ஆயிரத்து 344 மாணவர்கள் அரசு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று நீட் தேர்வில் தகுதி பெற்றனர். ஆனால் அவர்களில் 3 மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். இந்நிலையில் இந்தாண்டு அரசு நீட் பயிற்சி மையங்களில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களை பள்ளிக் கல்வித்துறை விரைவில் வெளியிடும் எனக் கூறப்பட்டுள்ளது.