360 டிகிரி கேமராக்களுடன் சென்னை சாலைகளில் சுற்றித்திரிந்த 10க்கும் மேற்பட்ட மர்ம வாகனங்கள் பறிமுதல். சென்னை காவல்துறை தீவிர விசாரணை.
இன்று மதியம் தி.நகர் ராமன் தெருவில் 360 டிகிரி கேமரா பொருத்தப்பட்ட வாகனம் ஒன்று சாலையில் அங்கும் இங்கும் சென்றுள்ளது. அந்த பகுதியில் திமுக எம்.பி. டி ஆர் பாலுவின் வீடு இருப்பதால் உடனடியாக மர்ம வாகனம் குறித்து தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தேனாம்பேட்டை போலீசார் உடனடியாக வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்ட போது, டெக் மகேந்திரா நிறுவனத்தின் வாகனம் என்பது தெரிய வந்தது. இதேபோல பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்னைகளில் சாலை முழுவதும் ஒவ்வொரு சாலையாக 360 டிகிரி கேமராக்கள் மூலம் வீடியோக்கள் மற்றும் புகைப்படம் எடுத்து வருவதாகவும் கூறியுள்ளனர்.
இதனையடுத்து உடனடியாக அந்த வாகனத்தை பறிமுதல் செய்து சென்னை கிழக்கு இணை ஆணையர் அலுவலகம் வளாகத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப பிரிவு அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். மேலும், சென்னை முழுவதும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்த மற்ற வாகனங்களையும் சென்னை கிழக்கு இணை ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள தொழில்நுட்ப பிரிவு அலுவலகத்திற்கு வரச் செய்தனர்.
ஏழு வாகனங்கள் முதற்கட்டமாக வந்த நிலையில் பின் அனைத்து வாகனங்களும் வரவழைக்கப்பட்டது. வாகனத்தை இயக்கிய ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் டெக் மகேந்திரா நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துடன் தொழில் ரீதியான ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டதும், ஆப்பிள் மேப் மற்றும் 360 டிகிரி Street view அப்டேட்க்காக சென்னை சாலைகளை வீடியோக்கள் மற்றும் புகைப்படம் எடுத்து வந்ததும் தெரிய வந்தது.
சென்னை சாலைகளில் இதுவரை என்னென்ன புகைப்படங்கள் மற்றும் விஷ்வல்ஸ் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து காவல்துறை - தகவல் தொழில்நுட்ப அணியினர் வாகனங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும், வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுக்க முறையான அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்தும் விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
நாளை வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் apple நிறுவனத்திற்காக விஷுவல் மற்றும் புகைப்படங்கள் எடுத்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வரும் சம்பவமானது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.