மதுரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கியதை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஆண்டுதோறும் மதுரையில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற திருவிழாவாக அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் அந்த திருவிழா வெகுவிமர்சையாக நடந்துள்ளது. கடந்த 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்தத் திருவிழா, ஒவ்வொரு கட்டத்திலும் பக்தர் வெள்ளத்தில் நடந்தேறியது. கடந்த 17ஆம் தேதி முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றான மீனாட்சி கந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து தேர்தல் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. தேர்தலும் தேரோட்டமும் ஒரே நாளில் நடைபெற்றதால் வாக்குப்பதிவு பாதிக்கப்படும் என்பதால், மக்கள் வாக்களிக்க கூடுதலாக இரண்டு மணி நேரம் வழங்கப்பட்டது. அதனால் அங்கு வாக்குப்பதிவும் சீராக நடைபெற்று, சென்னையை விட மூன்று சதவிகிதம் அதிகமாக வாக்குப்பதிவானாது.
இந்நிலையில் இன்று திருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெற்றது. அதிகாலை 6 மணியளவில் பச்சைப்பட்டு உடுத்தி தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு வைகைகறை ஆற்றில் இறங்கினார். இதனை அங்கு கூடியிருந்த லட்சக்காணக்கான, அதாவது சுமார் 10 லட்சம் பக்தர்கள் கண்டுகளித்தனர். தமிழகம் முழுவதிலிருந்து இருந்து குவிந்த பக்தர்களால் மதுரை திருவிழாக்கோலம் கொண்டு, ஸ்தம்பித்தது.