”செந்தில்பாலாஜி வங்கிக் கணக்கில் ரூ.1.34 கோடி வந்தது எப்படி?” - அமலாக்கத்துறை சொல்வது என்ன?
செந்தில் பாலாஜியின் சென்னை இல்லம் மற்றும் அவரது சட்டமன்ற அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். இந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நள்ளிரவு 3 மணியளவில் தெரிவித்தனர். அதேநேரத்தில், அவருக்கு நேற்று நள்ளிரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், அமலாக்கத்துறை விசாரணையில் இருந்த செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். அவருக்கு, வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், செந்தில்பாலாஜி தரப்பின் இடைக்கால ஜாமீன் மீதான மனு, அமலாக்கத் துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனுக்களின் மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், நாளை தீர்ப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம், செந்தில்பாலாஜிக்கு 3 அடைப்புகள் இருப்பதாகவும் அவருக்கு பை பாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் எனவும் ஓமந்தூரார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், கைது தொடர்பாக அமலாக்கத்துறை சமர்பித்த ரிமாண்ட் நகல் வெளியாகியுள்ளது. அதில் கைது செய்வதற்கான காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
”செந்தில்பாலாஜி வங்கிக் கணக்கை ஆய்வு செய்ததில் வருமான வரி தாக்கலில் இடம்பெறாத ரூ.1.34 கோடி இருப்பது தெரிய வந்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதுதொடர்பான தகவல்களை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.