கறி பிரியாணி விருந்து வைத்து ‘டிக் டாக்’ வீடியோ வெளியிட்ட இளைஞர்கள்..! சுற்றிவளைத்த போலீஸ்

கறி பிரியாணி விருந்து வைத்து ‘டிக் டாக்’ வீடியோ வெளியிட்ட இளைஞர்கள்..! சுற்றிவளைத்த போலீஸ்
கறி பிரியாணி விருந்து வைத்து ‘டிக் டாக்’ வீடியோ வெளியிட்ட இளைஞர்கள்..! சுற்றிவளைத்த போலீஸ்
Published on

ஊரடங்கு உத்தரவை மீறி கறி விருந்து செய்ததாக மயிலாடுதுறையில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல்நிலையத்திற்கு உட்பட்ட வில்லியநல்லூர் கிராமத்தில் வாய்க்கால் மதகு உள்ளது. அங்கே உள்ளூரில் உள்ள இளைஞர்கள் மற்றும் வெளியூரில் இருந்து வந்த இளைஞர்களும் என 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்து பிரியாணி சமைத்துள்ளனர். பின்னர் கூட்டமாக சாப்பிட்டதுடன், அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளமான டிக்டாக்கில் பதிவேற்றியுள்ளனர்.

இந்த வீடியோ பரவியதைத் தொடர்ந்து, ஊரடங்கை மீறிய இளைஞர்களை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில், காவல் உதவி ஆய்வாளர்கள் இளையராஜா, பாபுராஜ், ராஜேஷ் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் வில்லியநல்லூர் கிராமத்தை சுற்றிவளைத்து, பிரியாணி விருந்தில் பங்கேற்ற 10 நபர்களைக் கைது செய்தனர். இதையடுத்து, அவர்கள் மணல்மேடு காவல் ஆய்வாளர் தியாகராஜனிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்களை ஊரடங்கு காலத்தில் வெளியில் சுற்றமாட்டோம் என உறுதிமொழி ஏற்கவைத்து எச்சரித்த போலீஸார், ஊரடங்கு அமலில் உள்ளதால், காவல்நிலைய பிணையில் அவர்களது பெற்றோர்களுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்ற அதிகாரிகள் ஒருபுறம் உயிரைக்கொடுத்து போராடிக்கொண்டிருக்கும் நிலையில், எவ்வித அச்ச உணர்வும் இல்லாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் பொறுப்புடன் இருக்க வீட்டில் இருக்க வேண்டும் என காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com