“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
முகவரியில்லாமல் வரும் பலருக்கு முகவரி தந்துள்ள சென்னையில், தனக்கென தனி முகவரி ஏதும் இல்லாமல் சென்ட்ரல் அருகே உள்ள வால்டக்ஸ் சாலையில் வசித்து வரும் சாலையோர மக்களின் முகவரியாக மோனிஷா உருவாகியுள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வால்டாக்ஸ் சாலை தெருவோரம் வசிக்கும் நூற்றுக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் ஒருவர்தான் மோனிஷா. சிறு வயதிலேயே இவரது தந்தை விபத்தில் இறந்துவிட்ட நிலையில், கூலித் தொழிலாளியான இவரது தாய் குட்டியம்மாவிடம் வளர்ந்து வருகிறார் மோனிஷா.
ஊர் அடங்கிய பின்பு உறங்கி, விழிக்கும் முன்பு எழும் மோனிஷா ஒரு சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக திகழ்கிறார். சாலையோரம் வசிக்கும் மனிதர்களை நாம் கண்டு கொள்ளாத நிலையில், அவர்களையும் அவர்களது குழந்தைகளுக்குள் இருக்கும் திறமைகளையும் அடையாளம் காட்டுகிறது ஸ்ட்ரீட் சைல்ட் யுனைடெட் நிறுவனம்.
சர்வதேச அளவில், தெருவோர குழந்தைகளுக்கான போட்டிகளை இந்த அமைப்பு நடத்துகிறது. அதேபோல் சாலையோரம் வசிக்கும் குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் இந்த அமைப்பின் பிரதான நோக்கம். இப்படி கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து சென்று உலக கோப்பையை வென்ற அணியின் துணை கேப்டனாக இருந்தவர் மோனிஷா.
எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் சாலையோரம் வசிக்கும் மோனிஷா இந்த ஆண்டு நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 600-க்கு 499 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார். அனைத்து அடிப்படை வசதிகள் இருந்தும் பல மாணவர்கள் சொற்ப மதிப்பெண்களையே பெற்றுள்ளனர். ஆனால், தான் வசிக்க ஒரு வீடு இல்லை. படிப்பதற்குத் தேவையான எந்த அடிப்படை வசதியும் இல்லாத நிலையிலும், சாதிப்பதற்கு மனம் இருந்தால் போதும் என கிரிக்கெட்டில் சாதனை படைத்ததோடு படிப்பிலும் சாதனை படைத்துள்ள மோனிஷாவிடம் பேசினோம்...
எங்களுக்கென்று வீடு கிடையாது. நாங்கள் தெருவோரமாக வசிப்பவர்கள். இரவு தூங்குவதற்கு 11 மணி ஆகிவிடும். எங்கள் தெருவில் இருக்கும் 30 குடும்பத்தினருக்கும் இந்த ஒரு வீடுதான் இருக்கு. குழந்தைகள் டிவி பார்க்க வேண்டும் என்பதற்காக ஒரு டிவியை வைத்துள்ளோம். எல்லோரும் இங்கு தான் சார்ஜ் போடுவாங்க. வயதுவந்த பிள்ளைகள் உடை மாற்றுவதற்கும் தூங்குவதற்கும் இந்த வீட்டை பயன்படுத்திக் கொள்வோம்.
படிப்பு மட்டும் போதாது என்பதற்காக தான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். தற்பொழுது எனக்கு கிரிக்கெட் மிகவும் பிடித்த விளையாட்டாக உள்ளது. தினமும் காலை மாலை என இரு வேளையும் பயிற்சிக்கு செல்கிறேன். நல்ல பயிற்சி மையம் கிடைத்தால் என்னால் இன்னும் நன்றாக விளையாட முடியும். முறையாக பயிற்சி கிடைத்தால் கிரிக்கெட்டிலும் சிறந்து விளங்குவேன் என்ற மோனிஷாவின் லட்சியம் காவல் துறையில் பணியாற்ற வேண்டும் என்பதாக உள்ளது.
அதிகாரத்தில் இருந்தால்தான் எங்களுக்கானவற்றை எங்களால் செய்து கொள்ள முடியும். பொதுத் தேர்விற்கு படிக்கும்போது மிகவும் சிரமப்பட்டேன். நண்பர்கள் வீட்டிலும் பள்ளிக் கூடத்திலும் அதிக நேரங்கள் இருந்து பொதுத் தேர்வுக்கு தயாரானேன். சென்னை எத்திராஜ் கல்லூரியில் கிரிக்கெட் விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக அறிந்தேன். ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் அங்கு விண்ணப்பித்திருக்கிறேன் எனக்கான வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக சாதிப்பேன். கிரிக்கெட்ல இருக்க முக்கியத்துவம் உள்ள கல்லூரியில் படிக்க வேண்டும் என்பதே எனது ஆசை என்றவர் தொடர்ந்து...
எங்களுக்கான வாழ்க்கையே தெருவோரங்களில் தான் இருக்கிறது. இங்கேயே இருந்து விடாமல் அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்ற முயற்சியாக தான் படிப்பையும் விளையாட்டையும் கையில் எடுத்துள்ளேன் காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்பது எனது லட்சியம் என்றார்.
சாமானியர்கள் என்பதால் அவர்களை நோக்கி சாதனை வராமல் இருப்பதில்லை. முயற்சி செய்தால் சாதிப்பது சாதாரணமே. சாலையோரங்களில் நம்பிக்கை இழக்கும் நபர்களுக்கு நம்பிக்கை அளிக்கத் துடிக்கிறார் மோநிஷா.
செய்தியாளர்: சந்தான குமார்