பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து அந்நிறுவனத்தின் அலுவலகம், உரிமையாளர் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதேபோல், அப்படத்தின் பைனான்சியரான அன்புச்செழியனின் வீடு மற்றும் அலுவலகம் என சுமார் 20 இடங்களில் 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களில் இருந்து ரூ.65 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் ரூ.50 கோடியும், மதுரையில் ரூ.15 கோடியும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்களை செய்தி நிறுவனமான ஏஎன்ஐ வெளியிட்டுள்ளது. அதில் பத்துக்கும் மேற்பட்ட பைகளில் கட்டுக்கட்டாக ரூ.500 மற்றும் ரூ.2000 கட்டுகள் உள்ளன. அந்தப்பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.