சிவகங்கை அருகே செல்போன் டவர் அமைப்பதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், எஸ் புதூர் ஒன்றியம், படமிஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி. இவர் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு தற்போது தனது சொந்த ஊரான படமிஞ்சியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த வாரம் அழகர்சாமியை போனில் அழைத்த சிலர், உங்களுடைய வீட்டின் மாடியில் வோடோபோன் டவர் அமைக்க, இடம் தேர்வாகியிருப்பதாகவும் அதற்காக, 35 இலட்ச ரூபாய் முன் பணம் கொடுப்பதாகவும், மாத வாடகை 29,500 தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதற்கு ஆதாரமாக வோடோபோன் நிறுவனம் அனுப்பியது போல் இ-மெயில் அனுப்பியுள்ளனர். வோடோபோன் டவர் வைப்பதற்காக முன்பனமாக 41,500 நீங்கள் தர வேண்டும் எனவும் அதனை குறிப்பிட்ட வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்ப வேண்டியும் கேட்டுக் கொண்டுள்ளனர். இதை உண்மை என்று நம்பிய அழகர்சாமி குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு 41,500 ரூபாயை அனுப்பி உள்ளார்.
அதற்குப்பின் அவர்கள் அழைத்த அலைபேசி எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இரண்டு தினங்கள் தொடர்ந்து அந்த எண்ணிற்கு அழைப்பு கொடுத்தும் இவருடைய எண் அழைப்பை மட்டும் அவர்கள் நிராகரித்து வந்ததாக கூறப்படுகிறது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அழகர்சாமி, உசிலம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.