`மதுரை மீனாட்சியம்மன் அருள் வேணுமா? அக்கவுண்ட்ல பணம் அனுப்புங்க’–மோசடி கும்பலால் அதிர்ச்சி

`மதுரை மீனாட்சியம்மன் அருள் வேணுமா? அக்கவுண்ட்ல பணம் அனுப்புங்க’–மோசடி கும்பலால் அதிர்ச்சி
`மதுரை மீனாட்சியம்மன் அருள் வேணுமா? அக்கவுண்ட்ல பணம் அனுப்புங்க’–மோசடி கும்பலால் அதிர்ச்சி
Published on

“அக்கவுண்டுக்கு ஆயிரம் ரூபாய் அனுப்பினால் அம்மனின் அருள் தேடிவரும்” என மதுரை மீனாட்சியம்மன் கோயில் பெயரில் மோசடி விளம்பரம் செய்த டிரஸ்ட் நிர்வாகிகள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்த நிலையில் இங்கு வரும் பக்தர்கள் மீனாட்சி அம்மனின் குங்குமத்தை பிரசாதமாக பெற்றுச் செல்வது கோயிலின் சிறப்பு. இதை பயன்படுத்தி மதுரை கடச்சனேந்தல் பகுதியில் செயல்படும் காவேரி சேவா டிரஸ்ட் என்ற அமைப்பு தங்களது முகநூல் பக்கத்தில் ஒரு விளம்பரத்தை பதிவிட்டுள்ளனர்.

அதில், தங்களுடைய டிரஸ்ட் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் அனுப்பினால், பணம் அனுப்பியவர் பெயரில் மீனாட்சியம்மன் கோயிலில் மாதந்தோறும் முதல் வாரத்தில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வீட்டு முகவரிக்கு குங்குமம் அனுப்பி வைக்கப்படும் என மோசடியான விளம்பரத்தை பதிவு செய்துள்ளனர்.

இதனை நம்பி வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் டிரஸ்டுக்கு பணம் செலுத்துவதாக மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகத்திற்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்துள்ளன. இதனையடுத்து நேற்று மீனாட்சி அம்மன் கோயில் கண்காணிப்பாளர் ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில், மீனாட்சி அம்மன் கோயில் காவல்நிலைய போலீசார் காவேரி சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீனாட்சி அம்மன் கோயில் பெயரில் நடைபெற்ற இந்த மோசடியானது பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்களை இவர்கள் ஏமாற்றி உள்ளார்களா என்பது குறித்தான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com