செல்போன் நம்பரை மாற்றிவிட்டு வங்கியில் அப்டேட் செய்யாமல் இருந்ததால் வந்த வினை!

செல்போன் நம்பரை மாற்றிவிட்டு வங்கியில் அப்டேட் செய்யாமல் இருந்ததால் வந்த வினை. மோசடி நபரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மோசடி வழக்கு
மோசடி வழக்குPT Web
Published on

சேலத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(43). இவர் 2006 காலகட்டத்தில் சென்னை RA புரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.அப்போது சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள HDFC வங்கியில், Salary வங்கி கணக்கு தொடங்கியுள்ளார்.

பின் கடந்த 2009-ஆம் ஆண்டு பணி மாறுதல் காரணமாக அமெரிக்கா சென்று பணிபுரிந்து வரும் செந்தில்குமார் அதே வங்கிக் கணக்கை பயன்படுத்தி வந்துள்ளார். இதற்கிடையே கடந்த ஆண்டு சேலத்தில் உள்ள செந்தில்குமாரின் வீட்டுக்கு தவணைப் பணம் கட்டச் சொல்லி HDFC வங்கி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதனால், அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார் வங்கி நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு பேசியபோது ரூபாய் 3 லட்சம் கடனாகவும், ரூ. 1.66 லட்சம் பணம் கிரெடிட் கார்டு மூலமாகவும் பயன்படுத்தியுள்ளதாக வங்கி நிர்வாகம் கூறியுள்ளது.

இதனையடுத்து, செந்தில் குமார் இணையதளம் மூலமாக வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது, தனது பெயரை பயன்படுத்தி வேறு யாரோ ஆள் மாறாட்டம் செய்து வங்கியில் இருந்து மோசடி செய்துள்ளனர் என்பதை கண்டறிந்துள்ளார். எனவே, மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்க NRI Cell மூலம் சென்னை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

மோசடி வழக்கு
அரக்கோணம்: இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்து: தலைமை காவலர் உயிரிழப்பு

வழக்குப் பதிவு செய்த சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது 2006-ல் துவங்கப்பட்ட வங்கிக் கணக்கில் அப்போது செந்தில்குமார் பயன்படுத்திய செல்போன் எண்ணை கொடுத்து இணைப்பு ஏற்படுத்தியதும் அதன் பின் அமெரிக்கா சென்ற செந்தில்குமார் அந்த செல்போன் நம்பரை பயன்படுத்தாமல் இருந்து வந்ததும் இதனால் அந்த நம்பர் செந்தில்குமாரின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.

இதனிடையே மற்றொரு நபருக்கு செந்தில்குமார் ஏற்கெனவே பயன்படுத்திய மொபைல் எண்ணானது வழங்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது.

இதனையடுத்து செந்தில்குமார் 2006-2009 காலகட்டத்தில் பயன்படுத்திய செல்போன் எண்ணை தற்போது பயன்படுத்தி வரும் ஆம்பூரைச் சேர்ந்த ராஜ்கமல் என்ற நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

ராஜ்கமல்
ராஜ்கமல்

இரண்டு முறை சம்மன் அளித்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட போதும் தனக்கும் இந்த மோசடிக்கும் சம்பந்தம் இல்லை என போலீசாரிடம் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, செந்தில்குமார் பெயரில் கடன் பெற்ற நபரின் வங்கி ஆவணங்களை ஆம்பூர் HDFC வங்கியில் இருந்து வாங்கி சோதனை செய்ததில் ராஜ்கமல்தான் ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, ராஜ்கமாலை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், செந்தில்குமார் பயன்படுத்திய செல்போன் நம்பர், பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டப்பிறகு அந்த செல்போன் நம்பரை ராஜ்கமல் ஏதேச்சையாக வாங்கியுள்ளார்.

ராஜ் கமல் 2020-ம் ஆண்டு ஆம்பூரில் உள்ள HDFC வங்கியில் ரூ.3 லட்சம் கடன் வேண்டி விண்ணப்பித்துள்ளார். அப்போது அந்த செல்போன் எண் செந்தில்குமாரின் மயிலாப்பூர் HDFC வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருந்ததால் மயிலாப்பூர் வங்கியிலிருந்து செந்தில் குமார் என நினைத்து ராஜ் கமலுக்கு கால் செய்து வங்கிக் கடனுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா? எனக் கேட்டு பின் செந்தில்குமாரின் ஆவணங்கள் குறித்து ஆம்பூர் கிளையில் தெரிவித்துள்ளனர்.

இதனைப் பயன்படுத்திக்கொண்ட ராஜ்கமல் தன்னை செந்தில்குமார் எனக்கூறி அதற்கான ஆவணங்களை செந்தில்குமார் பெயரில் போலியாக கொடுத்து ரூ.3 லட்சம் கடன் வாங்கியுள்ளார் என்பதும் அதன்பிறகு அதே கிளையில் கிரெடிட் கார்ட் வாங்கி அதில் 9 முறை ரூ.1.60 லட்சத்துக்கு பொருட்கள் வாங்கியுள்ளதும் தெரியவந்தது.

இதற்கான மாத தவணை பணத்தை செந்தில்குமாரின் வங்கிக் கணக்கிலிருந்து வங்கி எடுத்ததுள்ளதும், வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்ட மொபைல் எண் அவரிடம் இல்லாததால் பணம் எடுக்கப்பட்ட விஷயம் செந்தில் குமாருக்கு தெரியாமல் இருந்து வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மோசடி வழக்கு
” முதல்வர் மருந்தக திட்டம் விரைவில் அறிமுகம்” - சுதந்திர தின உரையில் முதல்வர் பேச்சு!

பின் வங்கி, வீட்டுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் இணையதளத்தில் சோதனை செய்தபோதுதான் தனது பெயரில் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தெரியவந்து பின் புகாரளித்ததும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட ராஜ்கமல் பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

ராஜ்கமல் வேறு யாரையேனும் இதேபோல மோசடி செய்துள்ளாரா என கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com