யூட்யூப் விளம்பரம் பார்த்தால் பணமா? மோசடியில் ஈடுபட்டதா My V3 விளம்பரங்கள்..?

Youtube விளம்பரங்கள் பார்த்து வருவாய் ஈட்டி வந்த நிறுவனத்திற்கு ஆதரவாக நேற்று கோவையில் ஒரே நேரத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது, இதன் பின்னணி என்ன? விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
மோசடியில் ஈடுபட்டதா My V3 விளம்பரங்கள்?
மோசடியில் ஈடுபட்டதா My V3 விளம்பரங்கள்?புதிய தலைமுறை
Published on

செய்தியாளர்: பிரவீண்

கோவையை தலைமையிடமாக கொண்டு Myv3 Ads என்ற செயலியை சக்தி ஆனந்தன் என்பவர் நடத்தி வருகிறார். யூ-டியூப் சமூக வலைதளத்தில், இந்தச் செயலியின் சேனலும் இயங்கி வருகிறது. இதில் தினமும் 2 மணி நேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும், புதிய நபர்களை சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் பார்க்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி 360 ரூபாய் முதல் 1,21,000 ரூபாய் வரை உள்ள பல்வேறு பிரிவுகளில் பணம் செலுத்தி உறுப்பினராக சேர்ந்து தினசரி மொபைல் போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் 5 ரூபாய் முதல் 1,800 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் செலுத்தும் பணத்திற்கு ஏற்ப ஆயுர்வேத கேப்சூல்கள் வழங்கப்படுகிறது. புதிய நபர்களை சேர்க்கும் நபர்களுக்கு தனியாக பணம் வழங்கப்படுகிறது. இதனை நம்பி ஆயிரக்கணக்கானோர் இதில் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உட்பட நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் இதில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். முதலீட்டாளர்களுக்கு கூறியபடி அந்நிறுவனம் மாதம் மாதம் பணம் வழங்கி வருகிறது.

இந்நிலையில் தினசரி விளம்பரம் பார்ப்பதால் அதிக வருமானம் பார்க்கலாம் என ஆசைக்காட்டி பொதுமக்களை ஏமாற்றி பெரும் தொகையை வசூலித்து வரும் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 11ஆம் தேதி பாமக நிர்வாகியொருவர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இவ்வாறான சூழலில் கடந்த 19ஆம் தேதி மருத்துவர்களின் பரிந்துரையின்றி மாத்திரைகளை வழங்குவது சட்டத்திற்கு புறம்பானது (இந்த Myv3 Ads வழங்கும் ஆயுர்வேத கேப்சுயூல்களை சுட்டிக்காட்டி) என்று சைபர் கிரைம் காவல் துறை உதவி ஆய்வாளர் முத்து கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் அந்நிறுவனத்தின் மீது கடந்த 19 ஆம் சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோசடியில் ஈடுபட்டதா My V3 விளம்பரங்கள்?
ராமநாதபுரம்: மதுபோதையில் உணவக உரிமையாளரை தாக்கியதாக 4 பேர் கைது - 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

இந்த நிலையில் அந்த நிறுவனத்தின் மீது பொய் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாக கூறி, நிறுவனத்திற்கு ஆதரவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க முதலீட்டாளர்கள் வர உள்ளதாக தகவல் பரவியது. அப்படி அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தால், போக்குவரத்து பாதிக்கப்படும் எனக்கருதி நீலம்பூர் பகுதியில் உள்ள புறவழிச்சாலையில் கூடுமாறு அந்நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தன் youtube வாயிலாக வேண்டுகோள் விடுத்தார்.

இதன் பேரில் கோவை மாவட்டம் நீலாம்பூர் அருகே உள்ள புறவழிச்சாலையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் குவிந்தனர். அப்போது அந்த நிறுவனம் எந்த மோசடியும் செய்யவில்லை, தவறான புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்று அதில் பங்கேற்றுள்ளவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து முதலீட்டாளர்கள் கூறும் போது, ”நாங்கள் முதலீடு செய்யவில்லை. பணம் கொடுத்து பொருட்களை வாங்கியுள்ளோம். இந்த நிறுவனத்தினால் பலரது வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தினால் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை. யாரையும் அவர்கள் மோசடி செய்யவில்லை. ஆனால் மோசடி செய்ததாக பொய் புகார் அளித்து இந்த நிறுவனத்தை மூடப்பார்க்கிறார்கள். இந்த நிறுவனம் தொடர்ந்து செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

இதன் நிலையில் சம்பந்தப்பட்ட செயலி சார்ந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சக்தி ஆனந்தன் பேசும் போது, ”எங்கள் செயலி மீது பொய்யான புகார்கள் அளிக்கப்படுகிறது. எவ்வித மோசடிகளும் இங்கு நடக்கவில்லை” என்று கூறினார்.

மோசடியில் ஈடுபட்டதா My V3 விளம்பரங்கள்?
பேருந்து இயக்கத்தில் மாற்றம்... எந்தப் பேருந்து எங்கிருந்து கிளம்பும்? முழு தகவல்...

இந்த நிலையில் ஒரே சமயத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதால் நீலம்பூர் பைபாஸ் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் மற்றும் கோட்டாச்சியர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்டாச்சியர் உறுதியளித்தை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com