இளைஞர்களை குறிவைக்கும் ‘மோமோ’ சவால் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு, இளைய தலைமுறையினரை குறிவைத்து தாக்கிய அபாயகரமான ப்ளுவேல் விளையாட்டை தொடர்ந்து, சாலை விபத்தை ஏற்படுத்தும் கிகி சேலஞ்ச் ட்ரெண்டாது. அந்த வரிசையில் தற்போது 'மோமோ சேலஞ்ச்' என்ற அபாயகரமான விளையாட்டு இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.
மனநிலை பாதிக்கப்பட்ட ஏலியன் போன்ற தோற்றம் கொண்ட பெண்ணின் உருவத்தை முன்னிறுத்தி இந்த விளையாட்டு உருவாக்கப் பட்டுள்ளது. அந்த ஏலியன் உருவமுள்ள பெண்ணின் பெயரே 'மோமோ'. முதலில் ஃபேஸ்புக்கில் வலம் வந்த மோமோ கேம் தற்போது வாட்ஸ் அப்பிலும் வைரல் ஆவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் கேம் விளையாடிய பிறகு தற்கொலை செய்து இறந்துள்ளார். அவரது செல்போனை ஆய்வு செய்ததில் வாட்ஸ் அப்பில் வந்த குறுந்தகவலை பார்த்தபின் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்துள்ளது. வாட்ஸ் அப்பில் வந்திருக்கும் ஒரு லிங்கில் மோமோ சேலஞ்ச் விளையாட்டு இருந்துள்ளது. ஃபேஸ்புக் மூலம் வாட்ஸ் அப் எண் எடுக்கப்பட்டு இந்த லிங்க் அனுப்பப்படுகிறது.
இந்த விளையாட்டில் மனநிலையை பாதிக்கும் வகையில் பல புகைப்படங்கள் பகிரப்படுகின்றன. அதன்பிறகு அந்தரங்கம் தொடர்பான கேள்விகளை கேட்டு டாஸ்க்கை தொடங்குகிறது. குறிப்பிட்ட சவாலை ஏற்காதவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்ய வேண்டும். இதுதான் மோமோ சேலஞ்ச் டாஸ்க். அப்படி சவாலை ஏற்கவில்லை என்றால் செல்போனில் இருக்கும் தகவல்களும், நம்மிடமிருந்து பெறப்பட்ட அந்தரங்க தகவல்களும் வெளியிடப்படும் என மிரட்டல் விடுக்கப்படுகிறது. இந்த விளையாட்டு ஸ்பெயின் மற்றும் மெக்சிகோ நாடுகளில் வைரலாகி வருகிறது. இந்த விளையாட்டுக்கான லிங்க் வாட்ஸ் அப்பில் வந்தால் அதனை முயற்சி செய்ய வேண்டாம் என காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.