குடும்ப வறுமையின் காரணமாக 38 ஆண்டுகளுக்கு முன் குழந்தைகளை ஆதரவற்ற இல்லத்தில் ஒப்படைத்த தாய் தற்பொழுது தன் குழந்தைகள் முகம் காண தேடி அலைந்துவருகிறார்.
ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த காளியம்மாள் என்பவர், 1980 ஆம் ஆண்டு சிறுவயதிலேயே திருமணம் ஆகி அடுத்தடுத்த ஆண்டுகளிலேயே இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார். எதிர்பாராவிதமாக 1982-ம் ஆண்டை ஒட்டி, இவருடைய கணவர் முத்துச்சாமி விபத்தில் இறந்திருக்கிறார். இதனால் வருமானத்துக்கு வழியின்றி தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு 1982 ம் ஆண்டில் ஒட்டன்சத்திரத்தில் பிச்சை எடுத்து வந்ததுள்ளார். அச்சமயம் ஒரு மருத்துவரின் உதவியுடன் மதுரையில் உள்ள கென்னட் மருத்துவமனைக்கு 1982இல் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் பாதுகாப்பு கருதி அனுப்பி வைத்துள்ளார். அப்போது முதல் குழந்தைக்கு இரண்டரை வயதும் இரண்டாவது குழந்தைக்கு ஒன்றரை வயதுதான் ஆகி இருந்துள்ளது.
பின்னர் தன் குழந்தைகளை அம்மருத்துவமனையின் உதவியோடு ஒரு குழந்தைகள் இல்லத்தில் சேர்த்துள்ளார். குழந்தைகளை விட்டுவிட்டு வரும்பொழுது காளியம்மாளுக்கு 19 வயதுதான் ஆகியிருந்திருக்கிறது என அவர் தெரிவிக்கிறார். அப்போது அம்மருத்துவமனையினர் குழந்தைகளை அடிக்கடி பார்ப்பதாக வந்து தொந்தரவு செய்யக்கூடாது என்று கூறியுள்ளனர்.
ஐந்து ஆண்டுகள் கழித்து குழந்தைகளை பார்க்க வேண்டும் என்று எண்ணி காளியம்மாள் அங்கு சென்றபோது அவரின் முகவரியைப் பெற்றுக் கொண்ட மருத்துவமனையினர், ‘குழந்தைகளை இப்போது பார்க்க முடியாது. குழந்தைகள் கல்விக்காக சென்று இருக்கிறார்கள். குழந்தைகள் வந்த பிறகு நாங்களே அவர்களுக்கு உங்களுடைய முகவரியை கொடுத்து அனுப்பி வைப்போம்’ என்று கூறி இருக்கிறார்கள். ஆனால் இத்தனை ஆண்டுகள் ஆகியும் இப்போதுவரை பிள்ளைகளை பார்ப்பதற்கு அவர்கள் அனுமதிக்க இல்லை என்கிறார் காளியம்மாள்.
இதையும் படிங்க... மதுரையில் பிச்சையெடுக்க வைக்கப்பட்ட 20 குழந்தைகள் மீட்பு
ஒருகட்டத்தில் காளியம்மாளுக்கு உதவிசெய்த மருத்துவர் இறந்திருக்கிறார். அதன்பின் யாரை தொடர்புகொள்வதென தெரியாமல், தனக்கு உதவிசெய்த மருத்துவருடன் இவ்விவகாரத்தில் தொடர்பிலிருந்த மற்றொருவரான நீலாவதி என்பவரை தேடிக்கண்டறிந்துள்ளார் காளியம்மாள். மதுரையில் ‘பறவை இல்லம்’ என்ற பெயரில் குழந்தைகள் இல்லத்தை நடத்திவருகிறார் இந்த நீலாவதி. அவரை நேரில் சந்தித்தபோது அவர் தனக்கு காளியம்மாள் யாரென்றே தெரியாது என்பதுபோல் பேசி அனுப்பி உள்ளதாக தெரிகிறது. இப்படி தொடர்ச்சியாக குழந்தைகள் தொடர்பான விவரங்களை தர மறுப்பதால், இதன் பின்னணியில் அம்மருத்துவமனையில் ஏதோ மர்மம் இருப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் முதல் முதலமைச்சர் வரை தான் கோரிக்கை வைத்ததாகவும், ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று காளியம்மாள் கூறுகின்றார். இந்நிலையில் தற்போது காளியம்மாள் இதுதொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது புகார் மனுவை கொடுத்திருக்கிறார்.
தற்போது திருச்சி புங்கனூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார் காளியம்மா. தன் குழந்தைகளை காணாமல் வாடும் காளியம்மாள் தன்னுடைய பணியில் கிடைக்கும் வருமானத்தையும் வீட்டு வேலை செய்து கிடைக்கும் பணத்தையும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு செலவிட்டு வருகிறார்.
தனது பிள்ளைகளுக்கு தற்போது 38 வயதுக்கு மேல் இருக்கும் பட்சத்தில் வயதான காலத்தில் தான் தனியாக இருப்பதாகவும், தான் தன்னுடைய உடலாலும் மனதாலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்கூறும் காளியம்மாள் தன்னுடைய பிள்ளைகளை ஒருமுறையேனும் பார்த்திட வேண்டுமென்றும், அதற்கு அரசு உதவிட வேண்டும் என்றும் பிள்ளைகளை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
தான் அப்பொழுது வறுமையின் காரணமாக தன் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்ப்பதற்கு அந்த முடிவு எடுத்ததாகவும், ஆனால் தற்போது தன் குழந்தையை பார்க்க வேண்டும் என்பது மட்டுமே எண்ணம் என குறிப்பிடுகிறார்.