‘20 வருடத்திற்குப் பின் மகனை கண்டுபிடித்த தாய்’ - கண்கலங்க வைக்கும் கதை
பெரம்பலூரை சேர்ந்த தாய் இருபது ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகனை கண்டுபிடித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் திருவாளந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் இந்திரா. இவருடைய மகன் மணிகண்டன். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு 6 வயதில் காணாமல் போனார். அன்று முதல் மணிகண்டனின் பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தும், அவர் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் மணிகண்டன் தொலைந்த சோகத்துடன் வாழ்ந்து வந்தனர்.
மகனை பிரிந்த தாய் இந்திரா தற்போது கட்டட வேலை செய்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் தொழுதூரில் இந்திரா வேலை செய்துகொண்டிருந்த போது, அதே இடத்தில் இம்ரான் என்பவரும் வேலை செய்து கொண்டிருந்தார்.
தனது கணவனின் உருவத்தை போன்றும், சிறுவயதில் காணாமல் போன தனது மகன் சாயலில் அந்த இளைஞர் இருப்பதை கண்டு இந்திரா ஆச்சர்யமடைந்தார். இதுதொடர்பாக அந்த இளைஞரிடம் இந்திரா விசாரித்தபோது, தான் மணிகண்டன் இல்லை தனது பெயர் இம்ரான் எனக் கூறியுள்ளார். அத்துடன் ராமநத்தத்தைச் சேர்ந்த அபிபுல்லா என்பவர் தன்னை சிறு வயதிலிருந்து வளர்த்து வருவதாகவும் கூறியுள்ளார். இம்ரான் என்பவர் தன்னுடைய மகன் மணிகண்டன் தான் என்பதை உறுதியாக நம்பிய, இந்திரா ராமநத்தம் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் கொடுத்தார்.
இதையடுத்து ராமநத்தம் காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி, அபிபுல்லாவை அழைத்து விசாரனை செய்தார். அதில் 2004ஆம் ஆண்டு ராமநத்தம் சாலையோரம் சிறுவன் மணிகண்டன் அழுது கொண்டிருந்தாகவும், அவரை யாராவது தேடிவந்தால் ஒப்படைத்து விடலாம் என்று வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும் கூறியுள்ளார். யாரும் தேடி வராததால் தனது நான்கு ஆண் குழந்தைகளுடன் மணிகண்டனையும் சேர்த்து ஐந்தாவது குழந்தையாக நினைத்து வளர்த்ததாகவும் அவருக்கு இம்ரான் என்று பெயர் சூட்டியதாகவும் அபிபுல்லா கூறியிருக்கிறார்.
இதைத்தொடர்ந்து மணிகண்டன் உடலில் இருந்த அங்க அடையாளங்களை இந்திரா சரியாக கூறியதால், போலீசார் மணிகண்டனை அவரிடம் ஒப்படைத்தனர். ஆனால் மணிகண்டன் தன்னை வளர்த்தவரை விட்டு பிரிந்து செல்ல மனமில்லாமல் தன் தாய் இந்திராவோடு அழுதவாரே சென்றார். தான் வளர்த்த மகன் தன்னை விட்டு போவதை நினைத்து அபிபுல்லா கண்கலங்கினார். இந்த நிகழ்வு அங்கிருந்தவர்களையும் கண்கலங்க வைத்தது.