இந்து மதத்தையோ, தெய்வங்களையோ இழிவுபடுத்தி பேசவில்லை என்று மோகன் சி லாசரஸ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியை சேர்ந்தவர் கிறிஸ்தவ மத போதகரான மோகன் சி.லாசரஸ். இவர் இயேசு விடுவிக்கிறார் என்ற பெயரில் மதபிரசாரம் செய்து வருகிறார். இவர் கிறிஸ்தவ கூட்டம் ஒன்றில் பேசிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது. அதில் இந்து மதத்தை பற்றி அவதூறாக பேசியிருந்தார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் மீது, பல்வேறு பகுதிகளில் மொத்தம் 8 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இந்நிலையில் இந்து மதத்தையோ, தெய்வங்களையோ இழிவுபடுத்தி பேசவில்லை என்று மோகன் சி லாசரஸ் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ’இந்து மதத்தையோ, தெய்வங்களையோ நான் இழிவுபடுத்தி பேசவில்லை. எங்கள் ஊழிய ர்களுக்குள் நடந்த கூட்டத்தில் இந்தியாவில் மத நம்பிக்கை, அதுபற்றி வேதம் சொல்லும் காரியம் பற்றி அவர்கள் கேட்ட கேள்விக்கு விளக்கம் மட்டுமே கூறினேன். அதுவும் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கூட்டம் அது.
அதை சிலர் சுய ஆதாயத்திற்காக, சுய நலத்துக்காக இப்போது பரப்பி வருகின்றனர். எனது சொந்த சகோதரர்கள் இன்றும் இந்து மதத்தில் தான் உள்ளனர். அவர்களிடம் கூட நான் மதம் மாற்றம் செய்யக் கூறியதில்லை. சில குறிப்பிட்ட சங்கத்தை சேர்ந்தவர்கள் இதை பெரிது படுத்துகிறார் என்பது தெரியும். அதைத்தாண்டி இந்து சகோத ரர்கள் யாராவது இதற்காக வேதனை அடைந்திருந்தால் வருத்தப்படுகிறேன்’ என்று கூறியுள்ளார்.