மாமல்லபுரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்தித்த புகைப்படத்தினை, பரமக்குடி நெசவாளர்கள் நூல் சேலையில் 3டி முறையில் நெய்து சாதனை படைத்துள்ளனர்.
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் அக்டோபர் 11, 12-ம் தேதிகளில் பிரதமர் மோடி - ஷி ஜின்பிங் சந்திப்பு நடைபெற்றது. அப்போது தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து பிரதமர் மோடி கலந்து கொண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அந்த சந்திப்பை நினைவு கூறும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள மகாகவி பாரதியார் கூட்டுறவு நெசவாளர் சங்கத்தின் நெசவாளர்கள் நரேந்திர மோடி, ஷி ஜின்பிங் சந்திப்பு புகைப்படத்தை நூல் சேலையில் 3டி முறையில் நெசவு செய்து சாதனை படைத்துள்ளனர்.
நெசவாளர்கள் பெரும்பாலும் பட்டு சேலையில் தான் புகைப்படத்துடன் கூடிய சேலைகளை தயாரிக்கின்றனர். ஒரு மாற்றத்திற்காக, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பு புகைப்படம் வைத்து நூல் சேலை தயாரித்ததாக தெரிவிக்கின்றனர் பரமக்குடியை சேர்ந்த நெசவாளர்கள். மேலும் இந்த சேலையை நேராக பார்த்தால் இருநாட்டு தலைவர்கள் மட்டும் தெரியும் வகையிலும், சேலையின் பக்கவாட்டு பகுதியில் இருந்து, பார்த்தால் மாமல்லபுரம் சிற்பங்கள் தெரியும் வகையிலும் 3டி வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.