சென்னை ஆவடியில் தயாரிக்கப்பட்ட அர்ஜூன் மாக் 1 ஏ ராணுவ டாங்கை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
ரூ. 8,126 கோடி திட்டங்களை தொடங்கி வைக்க டெல்லியில் இருந்து விமானத்தில் கிளம்பிய பிரதமர் மோடி சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் அடையாறு ஐ.என்.எஸ் கடற்படை தளத்திற்கு சென்ற அவர், அங்கிருந்து விழா நடக்கும் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு காரில் சென்றார்.
அப்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்ச்சிகளை காரில் இருந்தபடியே ரசித்து சென்றார். பின்னர், சென்னை ஆவடியில் தயாரிக்கப்பட்ட அர்ஜூன் மாக் 1 ஏ ராணுவ டாங் முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும் அர்ஜூன் மாக் 1 ஏ ராணுவ டாங்கை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
தொடர்ந்து நேரு உள்விளையாட்டு அரங்க மேடைக்கு சென்ற பிரதமர் மோடி எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்களுக்கு மரியாதை செலுத்தினார். பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். கிருஷ்ணர் சிலையையை பிரதமருக்கு நினைவுபரிசாக கொடுத்தார் முதல்வர் பழனிசாமி.