மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள வாகன அனுமதிச் சீட்டு வழங்கும் மைய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
மதுரை மாவட்டத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்பவர்களும் வாகன அனுமதி சீட்டு கட்டாயம் வாங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் வாகன அனுமதி சீட்டு வாங்குவதற்காக, அனுமதி சீட்டு வழங்கும் மையத்தில் குவிந்தனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து மக்கள் கூட்டம் அதிகமானதால், வாகன அனுமதிச் சீட்டு வழங்குவது குறித்து முறையான வழிகாட்டுதல் வழங்கப்படவில்லை எனக் கூறி பொதுமக்கள் மையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தகவலறிந்த மதுரை மாவட்ட ஆட்சியர் அத்தியாவசிய பொருட்கள் வாங்க விரும்பும் பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள கடைகளுக்கு சென்று வாங்கிக்கொள்ளலாம் எனவும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடக் கூடிய அலுவலர்கள், பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் வாகன பயணங்கள் மேற்கொள்ள ஏற்கனவே உள்ள நடைமுறையே பின்பற்றலாம் என்றும் தெரிவித்தார்.
மேலும் பொதுமக்கள் முன்னதாக என்ன நடைமுறையை பின்பற்றினீர்களோ அதே நடைமுறையை பின்பற்றலாம் எனவும் அவர் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரின் இந்த அறிவிப்பால் வாகன அனுமதி தொடர்பாக எடுக்கப்பட முடிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.