செல்போன் டவரில் ஏறி கீழே குதித்துவிடுவேன் என மிரட்டியவரை எம்எல்ஏ லாவகமாக பேசி கீழே வரவழைத்தார்.
துறைமுகம் தொகுதி திமுக எம்எல்ஏ சேகர் பாபு. இவர் ராஜாஜி சாலை வழியாக சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த செல்போன் டவர் அருகே ஏராளமானோர் நின்றுகொண்டிருந்தனர். இதனை தனது காரில் இருந்தே கவனித்த எம்எல்ஏ சேகர் பாபு உடனடியாக வண்டியிலிருந்து கீழே இறங்கினார். அங்கே, செல்போன் டவர் மீது ஏறியியிருந்த ஒருவர் கீழே குதித்துவிடுவேன் என தற்கொலை மிரட்டலை விட்டுக்கொண்டிருந்தார்.
இதனையடுத்து அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் எம்எல்ஏ சேகர் பாபு. ‘உங்களுக்கு என்ன பிரச்னை. நான் தீர்த்து வைக்கிறேன்’ என எம்எல்ஏ பேசியதை தொடர்ந்து, மேலே இருந்த நபரும் தன் பிரச்னைகளை கூறியுள்ளார். தன் பெயர் மாறன் என்றும், தனக்கு வீடு இல்லை என்றும் சத்யா நகர் குடியிருப்பு வாசிகள் தன்னை அங்கே வாழவிடுவதில்லை என்றும் புகார் கூறினார். இதனையடுத்து நீங்கள் தங்குவதற்கு இடத்தை நான் ஏற்பாடு செய்து தருகிறேன் என எம்எல்ஏ உறுதி அளித்தார். இதனையடுத்து அந்த நபரும் செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கி தற்கொலை எண்ணத்தை மாற்றிக்கொண்டார்.