டிஎன்பிஎஸ்சி குரூப்-2 புதிய பாடத்திட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் இளைஞர்களை திரட்டி திமுக போராட்டம் நடத்தும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், குரூப் 2 முதல் நிலைத் தேர்வில் தமிழ்மொழித் தேர்வை நீக்கியிருப்பதால் ஏழை மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். தமிழ்மொழியில் அதிக மதிப்பெண் பெறும் வாய்ப்பை அதிமுக அரசு தட்டிப்பறித்துள்ளது என குற்றம்சாட்டியுள்ள ஸ்டாலின், பொது அறிவுத்தேர்வில் தோற்றுவிட்டால், அந்த இளைஞருக்கு வேலைவாய்ப்பு எட்டாக்கனியாகிவிடும் என குறிப்பிட்டுள்ளார்.
புதிய பாடத்திட்டம் தமிழக அரசு பணியிடங்களை வேறு மாநில இளைஞர்களுக்கு தாரைவார்ப்பதாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ள ஸ்டாலின், தமிழ்மொழிக்கும், கிராமப்புற இளைஞர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் குரூப் 2 மற்றும் 2ஏ புதிய பாடத்திட்டத்தை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பாடத்திட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்களை திரட்டி திமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.