18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைக்கிறார். இதன் பின் திருப்பூர், கோவை, சேலம், மதுரை, திருச்சி மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளையும் முதல்வர் ஆய்வு செய்ய உள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நாள்தோறும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வைரஸ் பரவலை தடுக்க மாநில அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் இன்று தொடக்கி வைக்க உள்ளார்.
சென்னையிலிருந்து காலை 8.30 மணிக்கு விமானம் மூலம் புறப்படும் அவர், சேலம் சென்று, அங்கு கொரோனா பரவல் தடுப்பு குறித்து பல்வேறு கட்ட ஆலோசனைகளை மேற்கொள்கிறார். பின்னர் அங்குள்ள மருத்துவமனைகளில் ஆய்வு செய்கிறார்.
அதன் பின் திருப்பூர் செல்லும் முதலமைச்சர், 12.15 மணிக்கு, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணியை தொடக்கி வைக்க இருக்கிறார். இதன்பின்னர் கோவை செல்லும் அவர், அங்கு கொடிசியா வளாகம், குமருகுரு கல்லூரி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடத்துகிறார். அவற்றை முடித்துக்கொண்டு இன்றிரவு விமானம் மூலம் மதுரைக்குச் செல்லும் மு.க.ஸ்டாலின், சர்க்கியூட் ஹவுஸில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
அதனைத்தொடர்ந்து நாளை காலை மதுரை ஆட்சியர் அலுவலகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கும் முதலமைச்சர், பின்னர் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருக்கும் பகுதியில் ஆய்வு மேற்கொள்கிறார்.
மதுரை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நாளை மதியம் திருச்சி செல்லும் மு.க.ஸ்டாலின், அங்கு எம்.சி. மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டுவிட்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறார். இதனையடுத்து மாலை 6.15 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரவு 8.15 மணிக்கு சென்னை திரும்புகிறார்.