கொடநாடு பங்களா வழக்கில் அடுத்தடுத்து நடைபெறும் நிகழ்வுகள் திரைப்படங்களில் வரும் த்ரில்லர் காட்சிகளையும் மிஞ்சி விடும் அளவுக்கு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு மற்றும் விபத்து வழக்குகளை மாநில உள்துறை செயலாளர் நேரடியாக கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தேடப்பட்டு வந்த நபரான ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், சயான் ஆகிய இருவரும் வெவ்வேறு இடங்களில் விபத்தில் சிக்கியிருப்பது சாதாரண நிகழ்வு போல் தெரியவில்லை என ஸ்டாலின் சந்தேகம் எழுப்பியுள்ளார். மேலும், விபத்தில் உயிரிழந்த ஓட்டுநர் கனகராஜ் தற்போதைய முதலமைச்சருக்கு நெருங்கிய உறவினர் என்ற செய்தியையும் புறந்தள்ளிவிட முடியாது என கூறியுள்ளார்.
கொடநாட்டில் வெறும் கைக்கடிகாரங்களுக்காகவே கொள்ளை நடந்ததாக காவல்துறை கூறுவது நம்பும்படியாக இல்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்துளார். எனவே, காவலாளி கொலை மற்றும் கொள்ளை, அதில் தொடர்புடையவர்களின் விபத்து குறித்த வழக்கை ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள நேர்மையான காவல் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அந்த விசாரணையை மாநில உள்துறை செயலாளர் நேரடியாக கண்காணிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.