செஸ் ஒலிம்பியாட்டை நடத்தும் வாய்ப்பு தமிழ்நாட்டிற்கு கிடைத்தது பெருமை: முதல்வர் ஸ்டாலின்

செஸ் ஒலிம்பியாட்டை நடத்தும் வாய்ப்பு தமிழ்நாட்டிற்கு கிடைத்தது பெருமை: முதல்வர் ஸ்டாலின்
செஸ் ஒலிம்பியாட்டை நடத்தும் வாய்ப்பு தமிழ்நாட்டிற்கு கிடைத்தது பெருமை: முதல்வர் ஸ்டாலின்
Published on

இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் நாளாக இது அமைந்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடரை நடத்தும் வாய்ப்பு தமிழ்நாட்டிற்கு கிடைத்தது பெருமை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். 

44வது செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ‘’ உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வந்துள்ள செஸ் விளையாட்டு வீரர்களை வரவேற்கிறேன். இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் நாளாக இது அமைந்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடரை நடத்தும் வாய்ப்பு தமிழ்நாட்டிற்கு கிடைத்தது பெருமை. நேரு விளையாட்டு அரங்கத்திற்கு பன்னாட்டு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் விழா அமைந்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழா மிக எழுச்சியோடு நடைபெற்றுள்ளது.

குஜராத் முதல்வராக இருந்தபோது 20,000 வீரர்களுடன் செஸ் போட்டியை நடத்தியவர் பிரதமர் மோடி. பிரதமர் மோடியை அழைக்க டெல்லிக்கு செல்லலாம் என திட்டமிட்டிருந்தேன். கொரோனா தொற்றால் என்னால் நேரில் சென்று அழைக்கமுடியாத சூழல் ஏற்பட்டது. நீங்கள் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்; நான் நிச்சயம் கலந்துகொள்வேன் என பிரதமர் மோடி உறுதியளித்தார்.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி முதலில் ரஷ்யாவில் நடப்பதாக சொல்லப்பட்டது. இதுபோன்ற பன்னாட்டு விளையாட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்ய குறைந்தது 18 மாதங்கள் ஆகும். வெறும் நான்கே மாதங்களில் பன்னாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்துள்ளது. தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை மட்டுமின்றி சுற்றுலா துறையும் மிகப்பெரிய வளர்ச்சியடையும்.

மொத்தம் 73 கிராண்ட் மாஸ்டர்களில் 26 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். தமிழ்நாடுதான் இந்தியாவின் செஸ் தலைநகரமாக உள்ளது. தம்பி என்பது சகோதரத்துவத்தை வலியுறுத்துகிறது. நாமெல்லாம் ஒரே குடும்பம் என்பதை குறிப்பிடுகிறது. பேரறிஞர் அண்ணா அவரின் தொண்டர்களை தம்பி என்றே அன்போடு அழைப்பார்.

மன்னர் காலத்தில் இருந்து புகழ்பெற்ற ஊர் சதுரங்கப்பட்டணம். போர் மரபுக்கும் தமிழர்களுக்கும் தொடர்பு இருப்பதை கீழடி சொல்கிறது. சதுரங்க விளையாட்டுக்கு ஆனைக்குப்பு என்ற பெயர் இருந்துள்ளது. செஸ் அதிர்ஷ்டத்தை நம்பிய விளையாட்டு அல்ல; அறிவை நம்பிய விளையாட்டு. செஸ் விளையாட்டை இந்தியாவில் மேலும் பரவச்செய்யும் வகையில் செஸ் ஒலிம்பியாட் இருக்கும்’’ என்று பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com