உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அக்டோபர் 3-ஆம் தேதிக்குள் அரசு நிலத்திலிருந்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வெளியேறுவதை தமிழக அரசு உறுதி செய்யவேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திறந்தவெளி சிறைச்சாலை அமைக்க தஞ்சையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 58.17 ஏக்கர் நிலத்தை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். நீதிமன்ற உத்தரவுப்படி அக்டோபர் 3-ஆம் தேதிக்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பியும், ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 28 கட்டடங்களை அப்புறப்படுத்த அந்த பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்கவில்லை என ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எவ்வித திரைமறைவு அழுத்தத்திற்கும் அடிபணியாமல், சட்டப்படி அரசு நிலத்தையும் பொதுநலனையும் பாதுகாக்க அரசும், தலைமை செயலாளரும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.