கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவையில் இருப்பது அதிர்ச்சியளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரையில் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியில் அமைந்துள்ள அணுமின் நிலையத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். அந்த காலகட்டத்தில் சுமார் 9000 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் இதுவரையிலும் நிலுவையில் இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கண்டனங்களை பதிவு செய்துள்ள அவர், “கூடங்குளத்தில் அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது அரசியல் நோக்கத்தோடு போடப்பட்ட வழக்குகளை அரசு இன்னும் திரும்பப் பெறவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. நிலுவையில் உள்ள வழக்குகள் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ளது. இந்த வழக்குகள் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.